பெண்களே தைரியமாக முன்வாருங்கள்.. நீங்கள் நோ சொன்னால் நோ தான்.. நடிகை குஷ்பு ஆவேசம்

Aug 28, 2024,06:47 PM IST

சென்னை:  மலையாளத் திரையுலகை உலுக்கி வரும் பாலியல் சுரண்டல்கள் புகார்கள் குறித்து நடிகை குஷ்பு ஆவேசமான அறிக்கை வெளியிட்டுள்ளார். பெண்கள் எதையும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. தைரியமாக எதிர்க்க முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக ஹேமா கமிட்டி அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையால் அங்கு பெரும் புயல் கிளம்பியுள்ளது. மொத்த நடிகர் சங்கமும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டது. சரமாரியாக வழக்குகள் பதிவாகி வருகின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த விவகாரம் குறித்து நடிகை குஷ்பு உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




திரையுலகை உலுக்கி வரும் #MeToo அனைவரையும் அதிர வைத்துள்ளது. தங்களுக்கு எதிரான அக்கிரமங்களுக்கு எதிராக உறுதியாக நின்ற பெண்களுக்கு எனது பாராட்டுகள். இந்த அக்கிரமத்தை முற்றிலுமாக களைய ஹேமா கமிட்டியானது தேவைப்பட்டது. ஆனால் இந்த அக்கிரமங்கள் ஒழியுமா?


அவதூறுகள், அசிங்கங்கள், பாலியல் சுரண்டல்கள், பெண்களை தங்களது இச்சைக்குப் பலியாக்குவது போன்றவை எல்லாத் துறையிலுமே உள்ளன. ஏன் பெண்கள் மட்டும் இப்படிக் கஷ்டப்பட வேண்டும். ஆண்களும் கூட இப்படிப்பட்ட மோசடிகளைச் சந்திக்கிறார்கள் என்றாலும் கூட, பெண்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் படும் கஷ்டம் மிக மிக குறைவு.


எனது 24 வயது மகளுடனும், 21 வயது மகளுடனும் இந்தப் பிரச்சினை குறித்து நீண்ட நேரம் விவாதித்தேன். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக அவர்கள் காட்டிய அனுதாபமும், புரிந்து கொள்ளுதலும் என்னை ஆச்சரியப்படுத்தின. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் முழுமையாக ஆதரவாக உள்ளனர். நீங்களும் உங்களது மகள்களுடன் பேசுங்கள். பிள்ளைகளுடன் பேசுங்கள். இன்று இல்லாவிட்டாலும் நாளை பேசுங்கள். இது எல்லா வகையிலும் நமக்கு பயன் தரும்.


அப்படிச் செய்வதன் மூலம் அவமானப்படுத்தப்படுவோம், குற்றம் சாட்டப்படுவோம்,  ஏன் நீ இதைச் செஞ்சே, எது உன்னை இப்படி செய்ய வைத்தது போன்றவை உடைபடும். பாதிக்கப்பட்டவர்கள் நமக்கு அந்நியமானவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு உங்களது, நமது ஆதரவு தேவைப்படுகிறது. அவர்களது குமுறலைக் கேட்க ஒரு காது தேவைப்படுகிறது. அவர்களுக்கு உணர்வுப்பூர்வமாக ஒரு ஆதரவு தேவைப்படுகிறது. இதை ஏன் முன்பே சொல்லவில்லை என்று கேட்போர், அவர்களது சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் பேசுவதற்கு தைரியம் வந்து விடுவதில்லை, அதைச் சொல்லும் வசதி கிடைத்து விடுவதில்லை.


ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, இதுபோன்ற வன்முறையால் ஏற்படுத்தப்படும் காயம் ஆழமாக நம்மைத் தாக்குகிறது. நமது சதையைத் தாண்டி ஆன்மாவைத் தாக்குகிறது. காயப்படுத்துகிறது. நமது நம்பிக்கை, அன்பு, பலம் ஆகியவற்றின் அடிப்படையேயே இது தகர்த்து விடுகிறது. ஒவ்வொரு தாய்க்குப் பின்னாலும், தனது பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு  இருக்கும். அதை தகரும்போது அனைவருமே உடைந்து போகிறோம்.


எனது தந்தை எனக்கு செய்த அக்கிரமம் குறித்து நான் முன்பே பேசியிருக்க வேண்டும் என்று பலரும் சொன்னார்கள். உண்மைதான். நான் முன்பே பேசியிருக்க வேண்டும்தான். ஆனால் எனக்கு என்ன நடந்தது.. எனக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நபரே என்னை தவறாக பயன்படுத்தியதால் நான் உடைந்து போய் விட்டேன். நான் கீழே விழுந்து விடாமல் காக்க எந்தக் கை வர வேண்டுமோ, அந்தக் கையே என்னை சீரழித்து விட்டது.


அனைத்து ஆண்களுக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, பாதிக்கப்பட்ட அனைவருக்குமே உறுதுணையாக இருங்கள், ஆதரவாக இருங்கள். ஒவ்வொரு ஆணும், ஒரு பெண்ணின் கஷ்டத்திலிருந்துதான் பிறக்கிறான். அவள் செய்த தியாகத்தால்தான் உங்களுக்கு உயிரே கிடைக்கிறது. உங்களை வளர்ப்பதற்காக ஒவ்வொரு பெண்ணும் கடுமையாக பாடுபடுகிறார்கள், சிரமப்படுகிறார்கள், கஷ்டப்படுகிறார்கள். இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு உங்களது தாயார், சகோதரிகள், சித்திகள், அத்தைகள், ஆசிரியைகள், தோழிகள் என பெண்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.




எங்களுடன் இருங்கள், எங்களைப் பாதுகாக்க முயலுங்கள், எங்களைக் கெளரவப்படுத்துங்கள். உங்களுக்கு உயிரையும், அன்பையும் கொடுக்கும் எங்களுக்கு ஆதரவாக இருங்கள். நீங்கள் கொடுக்கும் ஆதரவுக் குரல் அது தேவைப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் சென்று சேரட்டும்.


அனைவரும் ஒருங்கிணைந்தால்தான் நாம் பலம் பெற முடியும். அப்போதுதான் இந்த கொடுமையை சமூகத்திலிருந்து துடைத்தழித்து, பாதுகாப்பான, அன்பான உலகைப் படைக்க முடியும்.


பல பெண்களுக்கு அவர்களது குடும்பத்தினரின் ஆதரவு கூட கிடைப்பதில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சிறு நகரங்களிலிருந்து பெரிய ஸ்டாராக வேண்டும் என்ற கனவுகளுடன் அவர்கள் வருகிறார்கள். ஆனால் முளையிலேயே அதை கிள்ளி எறிந்து கருக்கி விடுகிறார்கள்.


இது அனைவருக்கும் ஒரு நல்ல விழிப்புணர்வு சம்பவமாக இருக்க வேண்டும். இனிமேலும் முறைகேடுகள் நடக்கக் கூடாது. பெண்களே தைரியமாக முன்வந்து பேசுங்கள்.  அனைவருக்குமே அவர்களது வாழ்க்கையைத் தேர்வு செய்து கொள்ள உரிமை உள்ளது. நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் அது வேண்டாம்தான். ஒருபோதும் உங்களது கண்ணியத்தையும், மரியாதையையும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.


ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, பாதிக்கப்பட்ட அனைவருடனும் நான் ஆதரவாக நிற்கிறேன் என்று கூறியுள்ளார் குஷ்பு.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்