மதுரை: மதுரையை சுற்றியுள்ள அனைத்து பகுதி மக்களும் அமைதியான முறையில் ஆர்ப்பரித்து எதிர்ப்பு தெரிவித்து வருவது என்னை கலங்கடிக்க செய்துள்ளது. நூறாண்டு காலமாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரத்தையும் அடியோடு அழிக்கும் இப்படி ஒரு திட்டம் அவசியமானதா..? மேலூர் மண்ணின் மைந்தனாக என் மனம் படும் பாடு சொல்லித் தீராது. கனத்த வலியுடனே இதனை பகிர்கிறேன் என நடிகரும் மதுரை மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ராமராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மேலூர் அருகே உள்ள நாயக்கர் பட்டி, அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம், பெருமாள் மலை உள்ளிட்ட 48 கிராமங்களை உள்ளடக்கிய 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க இருப்பதாக மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பை வெளியிட்டது. இதனை அடுத்து டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அதே சமயம் நடைபெற்ற சட்டப்பேரவை குளிர்காலகூட்டத் தொடரில் டாங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்காமல் அரிட்டாப்பட்டிக்கு உட்பட்ட 500 ஏக்கரை மட்டும் தவிர்த்து பிற இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மேலூர் பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் கடந்த ஜனவரி 7ஆம் தேதி நரசிங்கப்பட்டி பெருமாள் மலைப்பகுதியில் ஒன்றிணைந்து அங்கிருந்து மதுரை தல்லாகுளம் அஞ்சல் அலுவலகம் வரை ஆயிரக்கணக்கில் பேரணியாக நடந்து வந்து அமைதிப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் பெரும் பேசு பொருளானது. மெரீனா போராட்டத்தை நினைவுபடுத்தியது இந்த திடீர் மக்கள் எழுச்சிப் பேரணியும், போராட்டமும்.
இந்த நிலையில் நடிகரும், முன்னாள் எம்.பியுமான ராமராஜன் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
இன்று நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் "டங்ஸ்டன் சுரங்கம்" அமைக்கும் பணிக்கு தடை விதிக்கக்கோரி மதுரை சுற்றியுள்ள அனைத்துப்பகுதி மக்களும் அமைதியான முறையில் ஆர்ப்பரித்து எதிர்ப்பு தெரிவித்து வருவது என்னை கலங்கடிக்கச் செய்தது, மேலூரை சுற்றியுள்ள 50 கிராமங்களையும் அங்கே ரத்தமும் சதையுமாக பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அடியோடு அழிக்கும் இப்படி ஒரு திட்டம் அவசியமானதா...?
தமிழர்களின் வாழ்வியல் அடையாளமும், நுண்ணியல் வரலாற்று சான்றும், இதிகாச கல்வெட்டு அதியமும் ஆதாரமும் கொண்ட எம் மதுரை மண்ணின் மகத்துவத்தை தனித்துவத்தை அழித்து விட்டு என்ன சுரங்கம் அமைத்து எதை அதற்கு பதில் தந்து விட முடியும்...? பல தலைமுறைகளாக பாட்டன் பூட்டன் ஆண்ட விவசாய நிலங்களை அழித்துவிட்டு, வீடுகளை, நீர்தளங்களை, மலைக்குன்றுகளை அகற்றி அங்கே நிகழும் உங்கள் அதிசயம் முழுக்க மனிதகுலத்திற்கு எதிரானது. மேலூர் ஒட்டிய இத்தனை கிராமங்களோடு அரிட்டாபட்டியில் திட்டமிடும் இத்தகைய நிகழ்கால, எதிர்கால சந்ததிக்கு தீமை தரும், ஏன்... மதுரையின் அடையாளமே மறைக்கப்படும்.
இந்த டங்ஸ்டன் எடுக்கும் திட்டப்பணிகளை அறவே கைவிட வேண்டும், இங்கே மட்டுமன்றி அருகேயுள்ள தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் இத்திட்டத்தை கொண்டு வரக்கூடாது, அதற்கு ஆளும் அரசாங்கங்கள் மக்களின் உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்பளித்து இதுபோன்ற பூமியையோ இயற்கை வளங்களையோ, விவசாய வேளாண்மை நலங்களையோ பாதிக்காதவாறு செயல்பட வேண்டுகிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது தான் அரசுகளே தவிர அரசு மக்களை தேர்ந்தெடுக்கவில்லை. தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்ற கூற்றுப்படி வாழும் மக்கள் வீடுகளில் பொங்கல் பொங்க வேண்டுமே தவிர அவர்கள் மனம் துயரத்தில் பொங்க கூடாது. அதற்கு அரசாங்கம் உடனடியாக இத்திட்டத்தை கைவிட்டு மீண்டும் இதுபோன்ற தவறான திட்டங்கள் செயல்படுத்த மாட்டோம் என உத்தரவாதம் அளித்து பல லட்சம் மக்கள் நெஞ்சில் ஆறுதல் தர வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் பாதிப்பு எனக்கு வருத்தம் அளிப்பதை தாண்டி , மதுரை மேலூர் மண்ணில் பிறந்தவன், அந்த பூமியில் நடந்து திரிந்து அதில் விளைந்த அரிசியை தின்றவன், நீரை குடித்தவன் என்ற அந்த மண்ணின் மைந்தனாக என் மனம் படும்பாடு சொல்லித்தீராது, கனத்த வலியுடனே இதனை பகிர்கிறேன்.
மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஆதரவாக அமைதி வழியில் போராடிய, ஆதரவளித்து வரும் அனைத்து கட்சியினருக்கும், விவசாய சங்கங்களுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் அனைத்து துறை சார்ந்த மக்களுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றி என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பொங்கல் மட்டுமல்ல.. எல்லா நேரத்திலும் உழவர்களை நினைக்க வேண்டும்.. கார்த்தி
பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பாரா?.. புதிய தலைவரை தேர்வு செய்ய மத்திய அமைச்சர் வருகை!
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி.. பொங்கலுக்கு மழை இருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை... இப்படியே.. போனா எப்படி... புலம்பும் வாடிக்கையாளர்கள்!
விழுந்து விழுந்து அடிபட்டாலும்.. தளராமல் எழுந்து வந்து.. எழுச்சி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள்!
தேர்தலுக்கு முன்னும் பின்னும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதே ஆட்சியாளர் எண்ணம்: தவெக தலைவர் விஜய்
சென்னை அயலகத் தமிழர் நாள் விழாவில்.. வடஅமெரிக்க தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் புத்தக கண்காட்சி
7வது முறையாக திமுக ஆட்சி அமையும்.. ஏற்றம் காணும் அரசாக அது இருக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ரியாஸ்கானின் தாயாரும்.. உமா ரியாஸின் மாமியாருமான.. ரஷிதா பானு காலமானார்!
{{comments.comment}}