திமுகவின் Old students.. ரஜினிகாந்த் பேச்சால் கொதித்த துரைமுருகன்.. முதல்வர் ஸ்டாலின் அப்செட்!

Aug 26, 2024,11:12 AM IST

சென்னை:   திமுகவின் ஓல்ட் ஸ்டூடண்ட்ஸ்களை எப்படித்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமாளிக்கிறாரோ என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பது திமுகவுக்குள் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக மூத்த தலைவரான துரைமுருகன் கடும் அப்செட் ஆகியுள்ளார். ரஜினிக்கு பதிலடி தரும் வகையில் அவர் பேசிய பேச்சால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபமடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


இந்த நிலையில் ரஜினிகாந்த்தின் பேச்சைப் பாராட்டி முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் எது பேசினாலும் அது சர்ச்சையாவது வழக்கமாகி விட்டது. அவர் எந்த கோணத்தில் பேசுகிறார், என்ன நினைத்துக் கொண்டு பேசுகிறார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் அவரது பேச்சுக்கள் பெரும்பாலும் சர்ச்சையாவது வழக்கமாகி விட்டது. இப்போதும் கூட ரஜினியின் ஒரு பேச்சு வேறு மாதிரியான பொருளைக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டது.




சென்னையில் அமைச்சர் எ.வ. வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் நூலை வெளியிட்டார். அவரது பேச்சுதான் பெரிய அளவில் ஹைலைட் செய்யப்பட்டது. தற்போது முரசொலியும் கூட தலையங்கத்தில் வெகுவாகப் பாராட்டி கருத்து வெளியிட்டுள்ளது.


முரசொலி இதுதொடர்பாக எழுதியுள்ள தலையங்கம்:


மாண்புமிகு அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆற்றிய உரை என்பது இதயத்தின் அடியாழத்திலிருந்து ஆற்றிய உரையாக அமைந்திருந்தது. 


முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருவரையும் மிகப்பெரிய ஆளுமைகளாக வியந்து பேசினார் ரஜினிகாந்த் அவர்கள். பொதுவாக மேடைகளுக்கு வருவதில்லை, அதிலும் குறிப்பாக அரசியல் மேடைகளுக்கு வருவது இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி விட்டு, அவர் பேசிய அரசியல் என்பது மிகமிகத் தெளிவானது. 


'சுற்றி இருக்கும் ஐம்பது பேருக்காக வாழ்ந்து செத்துப் போவது தான் மனிதனின் இயல்பு. ஆனால் இனத்துக்காக, மொழிக்காக, சமூகத்துக்காக தனது ஒட்டு மொத்த வாழ்க்கையையும் ஒப்படைத்து வாழ்வது தான் பெரிய பேறு. அத்தகைய வாழ்க்கை வாழ்ந்தவர் கலைஞர்" என்ற வரியில் தலைவர் கலைஞரின் ஒட்டுமொத்த போராட்டக் குணத்தை யும், அருந்தொண்டையும் அடக்கிச் சொன்னார் ரஜினிகாந்த் அவர்கள். ''கலைஞர் அனுபவித்த துன்பத்தை வேறு ஒருவர் அனுபவித்திருந்தால் அவர்கள் எப்போதோ காணாமல் போயிருப்பார்கள். ஆனால் கலைஞரால் மட்டும் தான் இன்று வரை பிரகாசிக்க முடிகிறது. அவர் மறைவுக்குப் பிறகு தான் அதிகமாக நினைக்கப்படுகிறார். இனி தான் அவர் அதிகமாக நினைக்கப்படுவார்" என்றார் ரஜினி காந்த் அவர்கள்! 


'' ஒரு மனிதனின் வரலாறு என்பது அவனது மரணத்துக்குப் பிறகு கணக்கிடப்பட வேண்டும்" என்று சொன்னவர் தலைவர் கலைஞர். ரஜினிகாந்த் எடுத்துரைத்த கருத்து என்பது இந்த சொல்லின் விரிவாக்கமாக அமைந்திருந்தது. 


''முதலமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கலைஞர் ஒரே மாதிரிதான் இருப்பார். வீட்டு வாசலில் அதிகமாக போலீஸ் இருந்தால் அவர் முதலமைச்சராக இருக்கிறார் என்று அர்த்தம். இல்லாவிட்டால் இல்லை என்று அர்த்தம். அவரைச் சந்திக்கும் போது அதில் எந்த வேறுபாட்டையும் பார்க்க முடியாது" என்றார் ரஜினிகாந்த் அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருகாலத்தில் அளித்த பாராட்டைத்தான் நினைவூட்டியது ரஜினிகாந்த் அவர்களின் பாராட்டு. ''தண்டவாளத்தில் தலைவைத்துப் படு என்றாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதுபவர் தான் என் தம்பி கலைஞர் கருணாநிதி" என்றார் பேரறிஞர் அண்ணா. அரசியல் எல்லைக்கு வெளியில் இருந்து ரஜினிகாந்த் அவர்கள் இதே கருத்தைச் சொன்னார்கள். பதவியாக அல்ல பொறுப்பாக உணர்ந்து கலைஞர் அவர்கள் செயல்பட்டார், செயல்பட வைத்தார் என்பதை உணர்த்துவதாக இருந்தது அது.




தமிழினத் தலைவர் கலைஞரது வழித்தடத்தில் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் எத்தகைய சீரோடும் சிறப்போடும் கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகிறார் என்பதையும் ரஜினிகாந்த் அவர்கள் மனமுவந்து பாராட்டினார்கள். ''சில தலைவர்கள் மறைந்ததற்குப் பிறகு அந்தக் கட்சிகள் எப்படி கலகலத்துப் போயிவிடுகின்றன'' என்பதைக் கிண்டலாகக் குறிப்பிட்ட ரஜினி அவர்கள், '' கலைஞர் அவர்கள் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வென்று காட்டிவிட்டார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதுதான் அவரது உழைப்புக்கும் ஆளுமைத்திறனுக்கும் கிடைத்த வெற்றி என்றார் ரஜினிகாந்த் அவர்கள். 


மாக்சிம் கார்க்கி எழுதிய 'தாய்' காவியத்தில் புரட்சியாளர்கள் இலியிச் லெனினும் ஜோசப் ஸ்டாலினும் வருவார்கள். 'தாய்' காவியத்தை கலைஞர் அவர்கள் இப்படித் தொடங்குவார்கள்...


'இருட்டுக்குள் ரஷ்ய பூமி 

இடர் பட்டுக் கிடந்த போது 

ஏறனைய லெனின் ஸ்டாலின் 

இருதலைவர்களுடன் இணைந்து 

எழுச்சி முரசு கொட்டி 

எத்தனை முறையோ சிறைப்பட்டு 

எழுத்து வடிவிலும் எப்போதும் மணம் வீசும் பூ! 

மாக்சிம் கார்க்கியாம் மனிதநேய மாண்பு! 

மன்பதைக்குத் தந்திட்ட சிகப்பு பூ! செம் பூ! 

அன்னை என்றும் தாய் என்றும் அழைக்கப்படும் அற்புதப் பூ! 

பல மொழிகளில் மணம் பரப்பும் அப்பூவை 

கலை வண்ணமுடன் கவிதை நடையில் வழங்குகின்றேன்" - என்றுதான் அந்த நூல் தொடங்கும். இதோ தமிழ்நாட்டின் 'தாய்'க்காவியத்தில் தலைவர் கலைஞரும், இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினும் இணைந்து எழுச்சி முரசு கொட்டி எத்தனையோ முறை சிறைப்பட்டு இந்த மானுடம் பயனுற நல்ல பல திட்டங்களைத் தீட்டி முன்மாதிரி மாநிலமாக வளர்த்து வருகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். 


ரஷ்ய புரட்சி ஏற்படுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது 'தாய்' காவியம். புரட்சிக்கு அடித்தளம் இட்டது 'தாய்' காவியம். அம்மா நீலவ்னாவை புரட்சியாளராக ஆக்கினான் மகன் பாவெல். அன்னை அஞ்சுகம் அம்மையார் குறித்து பேரறிஞர் அண்ணா எழுதிய கட்டுரையும் ரஷ்யத் தாயைத் தான் நினைவூட்டும். ''நான் அஞ்சுகம் அம்மாவை சந்திக்கும் போதெல்லாம் கழகத்தைப் பற்றித்தான் பேசுவார்'' என்று எழுதி இருப்பார் அண்ணா. பேரறிஞர் பெருந்தகையை 'அண்ணா தம்பி' என்று அழைத்த ஒரே அன்னை அஞ்சுகம் அவர்கள்தான். 




''இன்றைக்கு நாங்கள் வீணாக அலைவது போல உனக்குத் தெரியலாம் அம்மா! ஒரு காலம் வரும். அப்போது நாங்கள் பேசிய கொள்கை அனைத்தையும் செயல்படுத்திக் காட்டுவோம் அம்மா" என்று அஞ்சுகம் அம்மையாரிடம் தான் சொன்னதாக கலைஞர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள். இதுதானே அரைநூற்றாண்டு வரலாறு! 


ரஷ்யத் 'தாய்' உருவாக்கியது ஒரு பாவெல் அல்ல. அதையும் தான் மிகச் சரியாகச் சொன்னார் ரஜினிகாந்த் அவர்கள். ''இப்போதுதான் அரசியலில் நுழைந்து கடினமாக உழைத்து, பேச்சில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு, மக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் அருமையான, பெயர், புகழ் பெற்று அரசியலில் தனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்" என்று ஒவ்வொரு சொல்லையும் அளந்தெடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சொன்னபோது அரங்கம் அதிர்ந்தது. 'அடுத்த ஐம்பது ஆண்டுகள் இயக்கத்தை வழிநடத்தப் போகிறவர் மாண்புமிகு உதயநிதி அவர்கள்'' என்று அமைச்சர் எ.வ.வேலு சொன்னபோதும் அரங்கம் அதிர்ந்தது. 


கொள்கைகள், அதனை வழிநடத்தும் தலைவர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. தலைவர்கள், தாங்கள் பேசிய கொள்கை நாட்டை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். 'தாய் காவியம்' என்பது தத்துவத்தின் காவியம் தானே!'திராவிட' காவியம் அல்லவா தமிழ்நாடு! திராவிட முன்னேற்றக் கழகம் என்று அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.


ரஜினி குறித்து துரைமுருகனின் கடுமையான கருத்து




மறுபக்கம் ரஜினிகாந்த் தனது பேச்சின்போது தன்னைப் பற்றிப் பேசியது குறித்து துரைமுருகனிடம் நேற்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதேதாங்க சினிமாவிலும் கூட மூத்த நடிகர்கள் வயசாகிப் போயி, பல் விழுந்து, தாடியெல்லாம் முளைத்தும் கூட தொடர்ந்து நடிக்கிறார்கள். இதனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.. சொல்றது எவ்வளவு ஈஸி என்று கடுமையான கருத்தை பதிலாக கொடுத்தார். இந்தக் கருத்து ரஜினி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


இந்தப் பேச்சினால் திமுக மேல்மட்டத் தலைவர்கள் குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்செட் ஆகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. துரைமுருகனையே முதல்வர் தொடர்பு கொண்டு ஏன் இப்படி பேசினீர்கள் என்று ஆதங்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. ரஜினியின் கருத்தினால் தான் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாக துரைமுருகன் விளக்கம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 


துரைமுருகன் என்ன பேசினாலும் கவலையில்லை - ரஜினிகாந்த்


துரைமுருகனின் இந்தக் கருத்து குறித்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, துரைமுருகன் என்ன சொன்னார் என்று தெரியவில்லை.  அவர் என்ன பேசினாலும் எனக்குக் கவலை இல்லை. அவர் எனது நீண்ட கால நண்பர். அவரை ரொம்பப் பிடிக்கும். எங்களுடைய நட்பு தொடரும் என்று கூறினார் ரஜினிகாந்த்.


துரைமுருகனை கேலியாக ரஜினி குறிப்பிட்டதும், ரஜினி குறித்து துரைமுருகன் கடுமையாக குறிப்பிட்டதும் பெரும் சலசலப்பாக பேசு பொருளாக மாறியுள்ளது. ரஜினி பேச்சை வைத்து நேற்று நடந்த பாஜக கூட்டத்திலும் அண்ணாமலை புது விளக்கம் அளித்துப் பேசினார்.  இதற்கிடையே, இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பல்வேறு கோணங்களில் அலசப்பட்டு வருகிறது. 


நூல் வெளியீட்டு விழாக் கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசும்போது, அரசியலில் மிக கவனமாக பேச வேண்டும் என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கவனமாக பேச வேண்டும் என்று கூறிய அவரே கவனக்குறைவாக துரைமுருகனை டீஸ் செய்தது பெரும் சர்ச்சையாகி விட்டது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்