சென்னை: "மோடிவேட்டர்" ஆக தன்னை அறிவித்துக் கொண்டு கல்வி நிலையங்களில் குறிப்பாக அரசுப் பள்ளிகளுக்குப் போய் பேசி வரும் நடிகர் தாமுவுக்கு எதிர்ப்புகள் வலுக்க ஆரம்பித்துள்ளன. அவரது பேச்சுக்கள் மாணவ, மாணவிகளுக்கு தேவையில்லாத மன அழுத்தத்தையே ஏற்படுத்துவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
பலகுரல் மன்னன் தாமு.. இதுதான் நடிகர் தாமுவின் ஆரம்ப கால அடையாளம். மிமிக்ரி கலைஞராக அறிமுகமாக, சின்ன சின்ன காமெடியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தவர் தாமு. பின்னர் முன்னணி ஹீரோக்களுடன் முக்கியமான காமெடியனாக வலம் வர ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஆன்மீகத்தின் பக்கம் திரும்பினார். கல்கி பகவான் குறித்து தீவிரமாக செயல்பட்டு வந்தார். பின்னர் மோடிவேஷனல் ஸ்பீக்கராக தன்னை மாற்றிக் கொண்டு பேச ஆரம்பித்தார். ஆரம்பத்தில் பல்வறு அமைப்புகள், கல்லூரிகளுக்குப் போய் பேசி வந்தார். பின்னர் பள்ளிகளுக்குப் போய் பேச ஆரம்பித்தார்.
இவர் பேசப் போகும் இடமெல்லாம் அந்த இடமே அழுகை மயமாகி விடுகிறது. இவர் ஆரம்பத்தில் ஜாலியாக பேசத் தொடங்குகிறார். அதன் பின்னர் அவர் பேசப் பேச மாணவ, மாணவியர் குறிப்பாக மாணவியர் கதறி அழுகின்றனர். இது பார்க்கவே மிகப் பரிதாபமாக இருக்கிறது. தன்னம்பிக்கை தருவதற்காக பேசப்படும் பேச்சு தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும்தான் தர வேண்டும்.. ஆனால் தாமு விஷயத்தில் இது தலைகீழாக இருக்கிறது. ஆரம்பத்தில் உற்சாகமாக இருப்போர், போகப் போக அழ ஆரம்பிக்கிறார்கள். அதிலும் கதறி அழுகின்றனர்.
இதை சைக்காலஜிஸ்டுகள் தவறான போக்கு என்று சொல்கிறார்கள். இப்படிப் பேசி பேசி உணர்வுகளைத் தூண்டி அழ வைப்பது மன ரீதியாக மாணவர்களை, குறிப்பாக மாணவிகளைப் பாதிக்கும் என்று அவர்கள் சொல்கிறார்கள். லவ் பண்ணாதீங்க என்று தாமு சொல்கிறார்.. அம்மா அப்பா பேச்சைக் கேட்டு நடங்க என்கிறார்.. அதைப் பண்ணாதீங்க இதைப் பண்ணாதீங்க என்று கண்டித்துப் பேசுகிறார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துள்ளது.
பல்வேறு பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை தாமுவின் போக்கு தவறானது. அவரை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும்.. அவர் எந்த தகுதியின் அடிப்படையில் பள்ளிக்ளுக்குப் போய் பேசுகிறார்.. இதை தமிழ்நாடு அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தாமுவின் பேச்சு "மோடிவேஷனல்" அல்ல.. மாறாக இது மறைமுகமான "மாரல் போலீசிங்" என்பது பலரின் கருத்தாக உள்ளது.
{{comments.comment}}