- எழுத்தாளர் வெங்கட் கிருஷ்ணா
"அம்மா... நாளைக்கி நைட்டு மாயவரம் போகணும்.. கஸ்டமர் விஸிட்.. ரெண்டு நாள் வேலை"
"சரிடா சங்கர்.. அப்படியே கதிராமங்கலத்துல அந்த பொண்ணப் பாத்துட்டு வந்துடேன்"
"அம்மா.. நானே எப்படிம்மா போய் பாக்கறது. நீங்க கூட வந்தா தானே மரியாதை"
"அதெல்லாம் பரவாயில்லைடா.. நான் அந்த மாமா கிட்ட பேசிட்டேன்.. அவர் சரின்னுட்டார்"
"சரிம்மா. வேலை முடிஞ்சப்புறம் போய் பாத்துட்டு வரேன்"
சங்கர்.. வயது 36.. அவன் கல்லூரி முடிந்து வெளியே வரவும் அவன் அப்பாவின் காலம் முடியவும் சரியாக இருந்தது.
அவனுக்கு கீழே ஆறு வயது இடைவெளியில் அவன் தம்பி.. அதற்கும் கீழே இரண்டிரண்டு வயது இடைவெளியில் இரண்டு தங்கைகள்.
அவர்கள் படிப்பு முடிந்து, தங்கைகளின் கல்யாணத்தையும் முடித்து இப்போது அவனுக்கு வரன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார் அவன் அம்மா.
இனி கல்யாணம் வேண்டாம் .. நான் இப்படியே காலம் தள்ளி விடறேன்னு சொல்லியும் கேட்கவில்லை.
பல இடங்கள் இவன் வயது காரணமாக நிராகரிக்கப்பட்டு இப்போது தான் ஒரு வழியாக இந்த இடம் பேச்சு வார்த்தையில் இருக்கிறது.
பெண் படித்து ஊரிலேயே டீச்சராக இருக்கிறாள்.. சங்கரை விட பத்து வயது இளையவள். இருந்தாலும் பரவாயில்லை என அவர்கள் வீட்டில் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.
கல்யாண செலவை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று சங்கரின் அம்மா சொல்லிவிட்டார்.
சங்கர் வயது வித்தியாசத்தை சொல்லி தவிர்க்கப் பார்த்தான். அவன் தங்கைகளும் அம்மாவும் விடவில்லை. ஒரு வழியாக ஒப்புக் கொண்டான்.
மாயவரம் வந்த வேலை முதல் நாள் முழுக்க இழுத்து விட்டது. இரண்டாம் நாள் மதியம் இரண்டு மணி போல வேலை முடிந்தது. ரூமுக்கு வந்து குளித்து உடை மாற்றி கதிராமங்கலம் கிளம்பி ஐந்து மணி சுமாருக்கு பெண் வீட்டுக் கதவை தட்டினான்.
வந்து கதவை திறந்த பெண்ணுக்கு சுமார் 32 வயதிருக்கும். அவள் முகத்தை பார்த்த சங்கருக்கு ஒரு நிமிடம் பேச நா எழவில்லை..
"உள்ளே வாங்க"... என்ற அந்தக் குரலில் மயங்கி நின்றான்..
"உமா......... நீ ஏம்மா கதவ தொறந்த" என்று கேட்டபடியே வந்தார் மகாதேவன் மாமா..
"வாங்கோ மாப்பிள்ளை.. அம்மா சொன்னா நீங்க வரேள்னு. ப்ரயாணமெல்லாம் சௌகர்யமா இருந்ததா? இங்க ஏதோ வேலைன்னு சொன்னாளே? முடிஞ்சுடுத்தா? எங்க தங்கினேள்? இங்கயே வந்து தங்கிருக்கலாமே?"
படபடவென பேசிக்கொண்டே போன மாமாவையே பார்த்தபடி நின்றான் சங்கர்.
"என்னன்னா.....வந்தவரை நிக்க வெச்சுட்டு வளவளன்னு கேள்வி மேல கேள்வியா கேட்டுண்டு இருக்கேளே.."
"நீங்க வாங்கோ மாப்பிள்ளை .. கை கால் அலம்பிண்டு இப்படி உக்காருங்கோ.. டீ உமா அந்த fan ஐ போட்டு விடு.."
"காபி சாப்பிடுவேளா?" ... இப்போது மாமியின் முறை..
ஹாலில் பாயை விரித்து அதன் அருகில் ஒரு சேரைப் போட்டு விட்டு உமா உள்ளே சென்றாள். மகாதேவன் பாயில் அமர்ந்து கொண்டார்
சங்கருக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை. கை கால் அலம்பிக் கொண்டு அங்கிருந்த நாற்காலியை
நகர்த்தி விட்டு மகாதேவன் அருகில் அமர்ந்து கொண்டான்.
மாமி இருவருக்கும் காபி எடுத்து வந்தாள்.
சங்கர் மெதுவாக ஆரம்பித்தான்..
"மாமா உங்க பொண்ணு பேரு அன்னபூர்ணின்னு அம்மா சொன்னா.. நீங்க உமான்னு கூப்பிட்டேளே.."
"மாப்பிள்ளை.. எங்கள மன்னிச்சுடுங்க... உங்க அம்மா கிட்ட நாங்க சொல்லல மறைக்கணும்ங்கற எண்ணமெல்லாம் கிடையாது. இவ என் மூத்த பொண்ணு உமா. கல்யாணமாகி ஒரு வருஷத்துல அவ ஆத்துக்காரர் ஒரு ஆக்ஸிடென்ட்ல போயிட்டார். பாவம். இவ இப்போ எங்களோடயே தான் இருக்கா" என்றார்.
அடுக்களையிலிருந்து எட்டிப் பார்த்த மாமியின் முகத்தில் பயம் தெரிந்தது.
சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது. யாரும் எதுவும் பேசவில்லை.
முன்னறையிலிருந்து உமாவின் விசும்பல் சத்தம் சன்னமாக கேட்டது.
"மாமா நான் ஒண்ணு சொல்லலாமா? மாமி.. நீங்களும் இங்க வாங்கோ".. என்றான் சங்கர்.
"மாமா.. எனக்கும் 36 வயசாயிடுத்து.. உங்க சின்னப் பொண்ணுக்கு 26 வயசுதான் ஆறது. அவளுக்கு வேற நல்ல மாப்பிள்ளை கிடைப்பான். நான் உமாவை கல்யாணம் பண்ணிக்கறேன்" என்றான்.
மாமாவுக்கும் மாமிக்கும் பேச்சே வரவில்லை..
ஒருவழியாக தன்னிலைக்கு வந்த மாமி கேட்டாள்..
"உங்கம்மா ஒத்துக்கணுமே மாப்பிள்ளை?".
"அம்மாகிட்ட நான் பேசிக்கறேன் மாமி.. நீங்க உமாவோட சம்மதத்தை மட்டும் கேட்டு சொல்லுங்க"
மாமி உள்ளே சென்று உமாவுடன் பேச.. சங்கர் அம்மாவை மொபைலில் கூப்பிட்டான்..
தயங்கி தயங்கி விஷயத்தை சொல்ல..
மறுபக்கம் நீண்ட மௌனம்.
பிறகு அம்மாவின் குரல் கேட்டது.
"உன்னைப் பெத்ததை விட, உன் தம்பி தங்கைகளுக்கு நீ பண்ணினதை விட.. இதுக்காக ரொம்ப பெருமைப் படறேண்டா. மனசு ரொம்ப நிறைஞ்சிருக்கு. அப்படியே உன் தம்பிக்கு அன்னபூரணிய பொண் கேட்டு பேசி முடிச்சுடு" என்றார்.
சங்கருக்கு சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த வீட்டில் மகிழ்ச்சி தாண்டவமாடியது!
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}