டெல்லி: முஸ்லீம்கள் என்ன கருத்தைக் கூறினாலும் அதை யாரும் ஏற்கப் போவதில்லை. நம்மால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தடுக்க முடிந்ததா.. இல்லையே... இப்போது பொது சிவில் சட்டம் பற்றிப் பிரதமரே பேசுகிறார்.. நம்மால் அதை தடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார் ஜமாய்த் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவரான மெளலானா அர்ஷத் மதானி.
பொது சிவில் சட்டம் குறித்து பாஜக பேசத் தொடங்கி விட்டது. பிரதமரே அதுகுறித்து போபாலில் நடந்த பாஜக கூட்டத்தில் விரிவாகப் பேசியுள்ளார். இது இப்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முஸ்லீம் அமைப்புகள் ஆலோசனையில் இறங்கியுள்ளன. இந்த பின்னணியில் ஜமாய்த் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவரான மெளலானா அர்ஷத் மதானி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே மிகப் பெரிய முஸ்லீம் அமைப்பு இதுதான். எனவே மதானியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
மதானி கூறுகையில், நம்மால் என்ன செய்ய முடியும்.. பிரதமர் பகிரங்கமாக முஸ்லீம்களின் உரிமைகள் குறித்துப் பேசுகிறார். முஸ்லீம்களின் மத உரிமைகள் பறிக்கப்படும் என்று அவர் சொல்லாமல் சொல்கிறார்.
இனி அடுத்து சட்ட கமிஷன் இதுகுறித்து விவாதிக்கும், முடிவெடுக்கும். அது என்ன முடிவெடுக்கும் என்று எங்களுக்குத் தெரியும்.. நிச்சயம் எங்களது கருத்துக்களை அது கருத்தில் கொள்ளாது. எத்தனை முறை நாங்கள் கோரிக்கை வைத்தாலும் அது கேட்கப்படாது, எத்தனை முறை மனு அளித்தாலும் அது பார்க்கப்படாது. நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்கப் போவதில்லை. அரசு என்ன சொல்கிறதோ அதை மட்டுமே அவர்கள் கேட்கப் போகிறார்கள். இப்போது பிரதமரே பகிரங்கமாக பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசுவதால், எங்களது கருத்தெல்லாம் மதிக்கப்படவே படாது.
முஸ்லீம்களால் இந்தச் சூழ்நிலையில் என்ன செய்ய முடியும்.. என்னதான் எங்களால் செய்ய முடியும்.. சாலைகளில் இறங்கிப் போராடாதீர்கள் என்று நான் கேட்டுக் கொண்டுள்ளேன். அதனால் எந்தப் பலனும் இல்லை. கெளரவமான முறையில் உங்களது கருத்துக்களை எடுத்து வையுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
எங்களால் எந்த மாதிரியான போராட்டத்தை நடத்த முடியும்.. என்ன போராட்டம் நடத்தினாலும் பலன் கிடைக்கப் போவதில்லை. எங்களிடம் இழக்க எதுவும் இல்லை. எங்களது மசூதியே போய் விட்டது.. எங்களால் என்ன செய்ய முடிந்தது.. தடுக்க முடிந்ததா இல்லையே.. எங்களிடம் இப்போது நம்பிக்கை மட்டுமே உள்ளது. கடவுளிடம் மட்டுமே நாங்கள் நம்பிக்கை வைக்க முடியும் என்றார் அவர்.
{{comments.comment}}