சென்னை: டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள சைலேந்திர பாபுவை பல்வேறு காரணங்களுக்கா மக்களால் நிச்சயம் மறக்க முடியாது.
சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளிலேயே மிகவும் வித்தியாசமானவராக திகழ்ந்தவர். எந்தவிதமான பந்தாவும் கிடையாது, ஆட்டிடியூட் காட்டியதில்லை. தனது போலீஸ் பணிக்காலம் முழுவதும் மாநில காவல்துறையிலேயே பணியாற்றியவர், மத்தியப் பணிக்குப் போனதே கிடையாது.
மக்களால் எளிமையாக அணுகக் கூடியவராக திகழ்ந்ததும் சைலேந்திரபாபுவின் விசேஷமாகும். அவரை அணுகுவது என்பது மிகவும் கடினமானதாக யாருக்கும் இருந்ததில்லை. அதேபோல சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக திகழ்ந்தவரும் கூட. சமூக வலைதளங்களை எப்படியெல்லாம் மக்கள் நன்மைக்காக பயன்படுத்தலாம் என்பதற்கு இவர்தான் சிறந்த ரோல் மாடல்.
உடற்பயிற்சி வீடியோக்கள்
இவரது வீடியோக்கள் மிகவும் பி��பலமானவை.குறிப்பாக உடல் ஆரோக்கியம் தொடர்பான இவரது டிப்ஸ்கள், யோசனைகள், ஆலோசனைகள் அடங்கிய வீடியோக்கள் மிகப் பிரபலமானவை. சைக்கிளிங் செய்வதன் நன்மை, உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள், மூச்சுப் பயிற்சி என இவர் கூறாத ஆலோசனையே கிடையாது. இளைஞர்களுக்கு மிகப் பெரிய முன்னுதாரணமாக திகழ்ந்தவர் சைலேந்திரபாபு.
அதேபோல ஆன்லைன் மோசடிகள் குறித்தும் அவ்வப்போது விழிப்புணர்வு வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருவார் சைலேந்திரபாபு. இவையும் மக்களுக்கு மிகவும் பலன் உள்ளவையாக இருந்தன. அருமையான மோட்டிவேஷனல் ஸ்பீக்கரும் கூட. மக்களிடம் அன்பாக பேச வேண்டும், அவர்களை அன்பாக அணுக வேண்டும். நட்போடு அவர்களுடைய குறைகளைக் கேட்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வருவார்.
வீரப்பன் வேட்டை - முஸ்கான் கொலையாளி என்கவுண்டர்
பல்வேறு அதிரடிகளுக்கும் பெயர் போனவர் சைலேந்திர பாபு. வீரப்பன் வேட்டையில் முக்கியப் பங்கு வகித்தவர். கட்டப் பஞ்சாயத்து செய்து வந்த பல ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ளக் காரணமாக இருந்தவர். சென்னையை உலுக்கிய பல்வேறு முக்கியமான தாதாக்களையும் வேரறுத்தவர். சென்னையில் ரவுடிகள் அட்டகாசம் மிகப் பெரியஅளவில் குறைய சைலேந்திர பாபுவின் அதிரடிகள்தான் காரணம்.
கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சிறுமி முஸ்கான் கொடூரமாக பாலியல்சித்திரவதைக்குள்ளாக்கி கொல்லப்பட்ட சம்பவத்தின்போது நடந்த போலீஸ் என்கவுண்டரில் மோகன்ராஜ் என்ற முக்கியக் குற்றவாளி கொல்லப்பட்டார். அதை மக்கள் அந்த அளவுக்குக் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த என்கவுண்டருக்கு முக்கியக் காரணம் சைலேந்திர பாபுதான். முஸ்கான் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் போலீஸார் மிகத் துல்லியமாக செயல்பட்டு வழக்கை நடத்தினர். இதற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மட்டுமல்லாமல், எதிர்க்கட்சித் தலைவராக கருணாநிதியும் கூட சைலேந்திர பாபுவை வெகுவாக பாராட்டினார் என்பது வரலாறு.
இளைஞர்களுக்கு முன்னுதாரணம்
எத்தனையோ இளைஞர்கள் போலீஸ் படையில் சேர முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறார் சைலேந்திர பாபு. யுபிஎஸ்சி தேர்வு தொடர்பாக இவர் கொடுத்த டிப்ஸ்கள் பல ஆயிரம் இளைஞர்களின் ஐபிஎஸ் கனவுகளுக்கு உரம் சேர்த்தது என்றால் அது மிகையாக இருக்காது. உடல் எப்போதும் பிட்டாக இருக்க வேண்டும். மனதை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.. இதுதான் இவரது ஸ்டாண்டர்ட் அட்வைஸ் ஆக இருக்கும். இவை இரண்டும் சரியாக இருந்தாலே நாம் செய்யும் எல்லாச் செயலும் வெற்றி பெறும் என்பது சைலேந்திர பாபுவின் கருத்தாகும்.
மிகச் சிறந்த காவல்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் சைலேந்திர பாபு. அவரது பணிகளை காவல்துறை மட்டுமல்லாமல், மக்களும் கூட நிச்சயம் மறக்க முடியாது. முன்னாள் டிஜிபிக்கள் தேவாரம், விஜயக்குமார் வரிசையில் மக்களின் மனதில் தனி இடம் பிடித்த "அதிரடி ஆக்ஷன் கிங்" அதிகாரி சைலேந்திரபாபு என்பதில் சந்தேகமில்லை.
{{comments.comment}}