மதுரை : வைகை ஆற்றில் இறங்குவதற்காக மதுரை வரும் கள்ளழகரை இருந்த இடத்தில் இருந்தே பின்தொடர புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மதுரை போலீசார், பக்தர்களின் வசதிக்காக இந்த வசதியை செய்துள்ளனர்.
மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 30 ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், மே 02 ம் தேதி மீனாட்சி திருக்கல்யாண வைபவமும், மே 03 ம் தேதி சித்திரை தேரோட்ட வைபவமும் நடைபெற்றது. சைவ திருவிழாவான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் சித்திரை திருவிழா வைபவங்கள் அனைத்தும் நேற்றுடன் நிறைவடைந்து விட்டது. இதைத் தொடர்ந்து, வைணவ திருவிழாவாக மதுரை அழகர்கோவில் நிகழ்வுகள் துவங்கி உள்ளன.
அழகர்மலையில் கோவில் கொண்டிருக்கும் சுந்தர ராஜ பெருமாள் நேற்று இரவு, கள்ளழகர் கோலத்தில், தங்க பல்லக்கில் எழுந்தருளி மதுரையை நோக்கி புறப்பட்டார். அழகர்மலையில் இருந்து மதுரை வரையிலான 21 கி.மீ., தூர பயணத்தில் ஏராளமான மண்டகப்படிகளில் எழுந்தருளி, கள்ளழகர் அருள் செய்ய உள்ளார். மே 04 ம் தேதி மாலை மதுரை மூன்று மாவடி பகுதியில் எதிர்சேவையும், மே 05 ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது.
இதனால் பக்தர்களின் வசதிக்காக கள்ளழகர் தற்போது எங்கு உள்ளார், எந்த வழியாக மதுரைக்கு வருவார், அடுத்து எந்த மண்டபகப்படிக்கு செல்ல உள்ளார் என்பதை பக்தர்கள் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்வதற்காக மதுரை காவல் துறை சார்பில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Madurai Kavalan ஆப்பை டவுன்லோட் செய்து, அதில் உள்ள “Track Alagar” என்ற லிங்கினை க்ளிக் செய்தால் போதும். அதிலுள்ள கூகுள் மேப் வசதியுடன் கள்ளழகர் எங்கு இருக்கிறார், எந்த இடத்திற்கு சென்றால் கள்ளழகரை தரிசனம் செய்ய முடியும் என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ளலாம்.
மதுரை போலீசார் இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த சிறிது நேரத்திலேயே ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் மொபைல் போனில் மதுரை காவலன் ஆப்பினை டவுன்லோட் செய்துள்ளனர். அழகர்மலையில் இருந்து கள்ளழகர் புறப்பட்டது முதல் மீண்டும் அழகர்மலைக்கு திரும்பிச் செல்லும் வரையிலான கள்ளழகர் செல்லும் வழித்தடங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
{{comments.comment}}