சென்னை: தனது இளம் பிராயத்திலிருந்து தன் மீது அன்பைப் பொழிந்த தனது குடும்பத்துக்கு நெருக்கமான பெண்மணி குறித்து உருக்கமாக நினைவாஞ்சலி செலுத்தியுள்ளார் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன்.
ஒவ்வொருவருக்கும் குடும்பம் தாண்டிய அன்பு வட்டம் என்று ஒன்று இருக்கும். அந்த அன்பு வட்டத்தில் ஒரு அண்ணன் இருப்பார், அண்ணி இருப்பார், அம்மா இருப்பார், அப்பா இருப்பார், தம்பி தங்கைகள் இருப்பார்கள்.. மாமா, அத்தை என அத்தனை உறவுகளும் இருக்கும். இதுபோன்ற உறவுகள் வாய்க்காதவர்களே இருக்க முடியாது.
இந்த உறவுகள் ஜாதியைத் தாண்டி, மதத்தைத் தாண்டி, மொழியைத் தாண்டியதாக இருக்கும் என்பதுதான் விசேஷமே. அப்படிப்பட்ட உறவு ஒன்றின் இழப்பை தனது டிவிட்டரில் உருக்கமாக பகிர்ந்துள்ளார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டுகள்:
பூமா மன்னி இல்லாமல் போய் இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. இன்று தான் வெங்கடேஷ் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்கச் சென்றேன். எங்கள் குடும்பத்தோடு ஒன்றி விட்ட வெங்கடேஷ், காயத்திரி (எ) தீபா, சுந்தர் (எ) சுந்துவின் அம்மா, என் மேல் அபாரமான அன்பு செலுத்திய, பல வருடங்களுக்கு முன்பே மறைந்துவிட்ட ரங்கா அண்ணாவின் மனைவி... என்ற அவரது முகங்களை விட எனக்கு நெருக்கமானது அவரது ' மன்னி' எனும் அடையாள முகம் தான்.
காலை மாலை இடுப்பில் குடம் சுமந்தபடி, வாசல் கூட்டியபடி, ரங்கா அண்ணாவிற்கும் குடும்பத்தாருக்குமான துணிகளை வாளி நிறைய ஊற வைத்தபடி, கடைக்குச் சென்றுவந்த காய்கறிப் பையைச் சுமந்தபடி, பெருமாளைக் கோவில் வாசலில் 'சேவித்த'படி, ... பூமா மன்னியைத் தொடர்ச்சியாகப் பார்த்திருந்த இளம் பருவம் எனது.
அத்தனை வேலைகளிலும் நான் விடுதியிலிருந்து விடுமுறைக்கு வந்துவிட்டேன் எனத் தெரிந்தாலே அடைக்கு ஊற வைத்துவிடுவார். சுடச் சுட அடைகளை வாழை இலையில் பொதிந்து காரச் சட்னியுடன் ' சுமதீ ' என்று வீடு வருபவரைப் பலமுறை 'எப்படி மன்னி நான் வந்தது தெரியுமென' அடைமேல் கண்ணாகக் கேட்டு வியந்திருக்கிறேன்.
'அடை வார்க்கணும்னு நினைச்சுண்டு தான் இருந்தேன். நீ வரச்சே எல்லாம் அப்படி அமைஞ்சுடுது' என சும்மாவானும் ஒரு பதில். அல்லது 'சூடாச் சாப்பிடு.. பேசாம' என்றொரு சிரிப்பு... மன்னிக்குத் தெரிந்த விதமான அன்பு இதுதான்.. நேசிப்பைச் சத்தமின்றிச் சொல்ல அவர் வார்க்கின்ற அடையின் மொறு மொறுவில் அவர் தானே மாவரைத்த வியர்வையே நெய் மணத்தை விடக் கூடுதலாக மணக்குமெனக்கு.
அவர் பிறந்த ஊரான ஜம்புலிபுத்தூருக்கு அவர் ஏதேனும் நல்லது கெட்டதுகளுக்குப் போவது மட்டும் தான். தன் வாழ்வின் பொழுதனைத்தும் புகுந்தவீட்டு 'மன்னி'யாக மட்டுமே கழித்தவர். இறுதி நாட்கள் வரை கோவில் கைங்கர்யத்திற்குச் செல்லும் கடைசி மகன் சுந்துவிற்குப் பெரும் துணையாக இருந்தவர்
ஆழ்வார் திருநகரிலே தான் பிறந்த பெருமையோடு எங்கள் குடும்பத்தில் ஐக்கியமான ஶ்ரீவரமங்கை (எ) மங்கை மாமி , அவரது மூத்த மகனான ரங்கா அண்ணன், மாமியின் மகளான கமலாக்கா, இன்னொரு மகளான எனது உற்ற தோழி லஷ்மி, என் அப்பாவின் அணுக்கத் துணையான நிழலென உதவிசெய்த கண்ணா அண்ணன், அவரது மனைவியான கலா 'மன்னி'- இவர்களையெல்லாம் நான் இழந்தபோதும்... மிகச் சமீபத்தில் இந்தக் குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்து என் மூத்த மகள் சரயூவைப் பிரியமுடன் வளர்த்த பேபி (எ) ரங்கநாயகியின் கணவர் செல்லப்பா மறைந்த போதும் -எங்களது சுக துக்கங்களில் பங்கு கொள்கிற அக் குடும்பத்தின் உறவெனும் சங்கிலிக் கண்ணிகள் ஒவ்வொன்றாய் தெறித்து விழுகையில் .. பெரும் வலி உணர்ந்தாலும் 'பூமா மன்னி'யின் இருப்பு பெரும் ஆறுதல் !

அவரது மறைவு என் குழந்தமையின் வண்ணச் சாளரங்களில் மற்றொன்றை நிரந்தரமாக அடைத்த வெறுமையோடு அவரது படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்தேன். நான் கடக்கவே முடியாத பசுமையான நினைவுகளை எனக்குத் தந்த அந்த வெளித் திண்ணை இடிந்திருந்தது. என் வளர் பருவத்தின் குழந்தமை ஆசைகளை , ரகசியங்களைப் ,பிறரியாக் குற்றங்களை, வெள்ளந்திக் கனவுகளைப் பகிர்ந்து கொண்ட என் தோழி லஷ்மியைச் சுமந்திருந்த திண்ணை.. .
நினைவுகளின் பசுமையில் ஒரு இம்மியளவு கூட இடியாத இந்தத் திண்ணையை எப்படிக் கடக்க? என்று கூறி உருகியுள்ளார் தமிழச்சி தங்கப்பாண்டியன். அவரது இந்தப் பதிவு பலரையும் நெகிழ வைத்துள்ளது. தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு பலரும் இரங்கலும், அதேசமயம், அவரது உறவைப் போற்றும் இந்த அன்புக்கு பாராட்டும் தெரிவித்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.
{{comments.comment}}