சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் உயர் மட்டக் குழு சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் மொத்தம் 9 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
இதில் சிங்க்பபூரில் 2 நாள் பயணமும், ஜப்பானில் 7 நாட்கள் சுற்றுப்பயணமும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் திட்டத்துடன் ஸ்டாலின் குழு சிங்கப்பூர் செல்கிறது.
மே 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்கள் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் அடங்கிய உயர் மட்டக் குழுவும் ஸ்டாலினுடன் சிங்கப்பூர் வருகிறது.
மே 24ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்கிறார். சிங்கப்பூர் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதில் 350க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மாநாட்டில் உரையாற்றும்போது தமிழ்நாட்டுக்கு வந்து முதலீடுகளை மேற்கொள்ள தொழிலதிபர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுப்பார்.
இந்த மாநாட்டில் சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஐ. ஈஸ்வரன், சிங்கப்பூருக்கான இந்திய துணைத் தூதர் பி.குமரன், சிங்கப்பூர் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் நீல் பரேக் உள்ளிட்டோரும் கலந்து கொள்வார்கள்.
தனது பயணத்தின்போது சிங்கப்பூர் தமிழர்களுடன் தனியாக ஒரு சந்திப்புக்கு முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். ஒரு ரோடுஷோ போல இதை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
7 நாள் ஜப்பான் சுற்றுப்பயணம்
சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு மே 31ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்வார். ஜப்பானின் பல்வேறு நகரங்களுக்கும் அவர் செல்லவுள்ளார். பல்வேறு நிறுவனத் தலைவர்களையும், வர்த்தகப் பிரமுகர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார். தொழில் முதலீடுகள் குறித்த பல்வேறு ஒப்பந்தங்களும் இந்த பயணத்தின்போது கையெழுத்தாகக் கூடும்.
முதல்வராகப் பதவியேற்ற பின்னர் முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளும் 2வது வெளிநாட்டுப் பயணம் இது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது ரூ. 6100 கோடி மதிப்பிலான முதலீடுகள் தொடர்பாக உறுதி செய்யப்பட்டது. அதில் முக்கியமானது, கோவையில் லூலு அமைப்பின் மிகப் பிரமாண்டமான சூப்பர் மார்க்கெட் அமைக்கும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
{{comments.comment}}