சென்னை : தமிழக ப்ளஸ் டு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டு பொதுத் தேர்வுகள் மார்ச் 13 ம் தேதி துவங்கி, ஏப்ரல் 3 ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 8,51,000 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்வு முடிவுகளை சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
காலை 09.30 மணிக்கு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மூலமும், எஸ்எம்எஸ் வழியாகவும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று தாமதமாக 10 மணிக்கு மேலாகவே பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 94.03 சதவீதம் பேர் தேர்வு அடைந்துள்ளனர்.
தேர்வு எழுதிய 08.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 97 சதவீதம் தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் 2வது இடமும், பெரம்பலூர் மாவட்டம் 3 வது இடமும் பிடித்துள்ளது. மாணவர்களில் 3,49,697 பேரும், மாணவிகளில் 4,05,753 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 4.93 சதவீதம் கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.38 % ஆகவும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.45 சதவீதமாகவும் உள்ளது. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை 89.80% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 95.99%. தனியார் சுயநிதி பள்ளிகளில் 99.08 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
தமிழ் பாடத்தில் 2 பேர், ஆங்கிலத்தில் 15 பேர், கணிதத்தில் 690 பேரும், கணக்குப் பதிவியலில் 6573 பேரும், இயற்பியலில் 812 பேரும், வேதியியலில் 3909 பேரும், உயிரியில் பாடத்தில் 1494 பேரும், தாவரவியல் பாடத்தில் 340 பேரும், விலங்கியல் பாடத்தில் 154 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் 4618 பேரும், வணிகவியல் 5678 பேரும் , பொருளியல் பாடத்தில் 1760 பேரும் நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
{{comments.comment}}