சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த பயணிகளுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசேரில் நேற்று இரவு நடந்த ரயில் விபத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 900 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள மாநில அவசர கால மீட்பு மையத்திற்கு நேரில் சென்று ஒடிசாவில் நடக்கும் மீட்புப் பணிகள் குறித்த விபரங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கேட்டறிந்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடனும் அவர் தொலைப்பேசியில் உரையாடினார். தமிழக அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் நவீன் பட்நாயக்கிடம் நான் பேசினேன். தமிழக அரசால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக உறுதி அளித்துள்ளேன். ஆனால் தற்போதுள்ள நிலையில் உதவிகள் ஏதும் தேவைப்படாது. அவர்களே நிலைமையை சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவ சங்கர், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஒடிசா விரைந்துள்ளனர். நேற்று முதல் மாநில அவசர கால மையம் சார்பில் ரயில் விபத்து தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறார்கள். தேவையானவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்கள்.
இதுவரை எத்தனை தமிழர்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்ற எண்ணிக்கை சரியாக கிடைக்கவில்லை. ஒடிசா அரசு அதிகாரிகளுடன் நமது அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து வருகிறார்கள் என்றார். மேலும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
{{comments.comment}}