டெக்சாஸ்: சுரேந்திரன் கே பட்டால்.. இவர் செய்துள்ள சாதனை.. இன்றைய இளைஞர்களுக்கு, அதிலும் வறுமை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சிக்கி போராடி வரும் தலைமுறையினருக்கு மிகப் பெரிய ரோல்மாடல்
அப்படி என்ன செய்து விட்டார் சுரேந்திரன் கே பட்டால்?
51 வயதாகும் சுரேந்திரன் கே பட்டால், இந்திய வம்சவாளியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் செட்டிலாகி வசித்து வருகிறார். டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். ஆனால் இந்த இடத்திற்கு வரும் முன்பு அவர் பட்ட சிரமங்கள், அவரது ஆரம்ப கால வாழ்க்கை.. மிக மிக சோகமானது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரன் கே. பட்டால். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். பள்ளிப் படிப்பை கூட படி்க முடியவில்லை. இதனால் சிறு வயதிலேயே கூலி வேலைக்குப் போனார். வீட்டு வேலைகளை செய்து சம்பாதித்தார். பீடி சுற்றினார். இந்த சொற்ப வருவாய்தான் அவரது குடும்பத்தையும் அவரையும் காப்பாற்றியது.
இதுகுறித்து என்டிடிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 10ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. வீட்டில் பணம் இல்லை. ஒரு வருடம் பீடி சுற்றி சம்பாதித்தேன். அதுதான் எனது வாழ்க்கையின் முகத்தை மாற்றியது. ஒரு வைராக்கியம் வந்தது. மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் உதவி பெற்று எனது படிப்பை தொடர்ந்தேன். கூடவே சட்டப் படிப்பையும் படித்தேன். எனது நண்பர்கள்தான் எனக்கு பேருதவியாக இருந்தனர்.
எல்எல்பி படித்து வக்கீலான பிறகு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தேன். இன்று நீதிபதியாகியுள்ளேன். மிகப் பெரிய போராட்டங்கள்தான் எனது மொத்த வாழ்க்கையும். இங்கு வந்த பிறகும் கூட என்னை அந்தப் போராட்டம் விடவில்லை. ஜனநாயகக் கட்சி சார்பில் இந்த நீதிபதி பதவிக்கான போட்டியில் நான் போட்டியிட்டேன். ஆனால் நான் ஜெயிப்பேனா என்று பலரும் சந்தேகித்தனர். ஏன் எனது கட்சிக்கே கூட சந்தேகம் இருந்தது காரணம், எனது ஆங்கில உச்சரிப்பு. ஆனால் நான் ஜெயித்தேன்.
எல்லோருக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்... உங்களது எதிர்காலத்தை முடிவு செய்ய அடுத்தவரை அனுமதிக்காதீர்கள்.. நீங்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்றார் சுரேந்திரன்.
எத்தனை உண்மையான வார்த்தை!
{{comments.comment}}