கோல்கத்தா : இந்தியி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ.,யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு அளிக்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பு, தற்போது இசட் பிரிவு பாதுகாப்பாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது.
கங்குலிக்கு இது நாள் வரை அளிக்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பின் காலம் காலாவதி ஆகி விட்டது. இதனையடுத்து அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை புதுப்பிக்கும் நடைமுறைகள் துவங்கப்பட்ட நிலையில், தற்போது பாதுகாப்பின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை அளிக்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பின் போது கங்குலியுடன் பாதுகாப்பிற்காக சிறப்பு பிரிவை சேர்ந்த 3 போலீஸ் செல்வார்கள். இதே போல் 3 போலீஸ் அவரது வீட்டின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர். தற்போது இசட் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதால் இனி 8 முதல் 10 போலீசார் கங்குலியுடன் பாதுகாப்பிற்கு இருப்பார்கள்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருவதால் கங்குலி, தனது டில்லி டேர்டெவில்ஸ் அணியுடன் பல நகரங்களுக்கும் பயணம் செய்து வருகிறார். மே 21 ம் தேதி தான் கங்குலி கோல்கத்தா திரும்புவார். அன்று முதல் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என கோல்கத்தா போலீஸ் தலைமையகத்தில் நடந்த ஆலோசனைக்கு பிறகு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தை பொறுத்த வரை தற்போது முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் சி.வி.அனந்த போஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி.,யும் தேசிய செலாளருமான அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கு மட்டுமே இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் அனைவருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களுடன் மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவருக்கு ஏற்கனவே மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
{{comments.comment}}