சென்னை: தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதால் அவருக்கு விரைவில் பைபாஸ் சிகிச்சை செய்ய வேண்டும் என்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, அமலாக்கப் பிரிவு தொடர்ந்த பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை ஜூன் 28ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருப்பதாக கூறி கதறித் துடித்ததால் உடனடியாக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு இசிஜி உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டது.
இசிஜி சீராக இல்லை என்பதால் அவருக்கு இன்று ஆஞ்சியோ பரிசோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இயக்குநர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று (ஜூன் 14) காலை 10.40 மணிக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது அவரது இதய நாளங்களில் 3 இடத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு விரைவில் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு சிறைக் காவல்
இதற்கிடையே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை சிறைக்காவலில் வைப்பது தொடர்பாக சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி அல்லியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேரில் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக்குப் பின்னர் செந்தில் பாலாஜியை நேரில் பார்த்து நிலவரத்தை அறிந்த பிறகு உத்தரவு பிறப்பிக்க நீதிபதி முடிவெடுத்தார்.
அதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை நீதிபதி நேரில் வந்து சந்தித்தார். பின்னர் தனது உத்தரவை அவர் பிறப்பித்தார். அதன்படி ஜூன் 28ம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் அங்கு மாற்றப்பட்டவுடன் அறுவைச் சிகிச்சை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
{{comments.comment}}