டில்லி : காங்கிரஸ் மற்றும் திமுக கேட்டுக் கொண்டதன் பேரில் ஜூன் 12 ம் தேதி பாட்னாவில் நடப்பதாக இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 லோக்சபா தேர்தலில் பாஜக.,விற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரே அணியாக திரள வேண்டும் என்பதற்காக பாட்னாவில் ஜூன் 12 ம் தேதி எதிர்க்கட்சிகளின் லோசனை கூட்டத்தை நடத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முன்னேடுத்தார். கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கேவை கலந்து ஆலோசித்த பிறகு தான் அவர் தேதியை முடிவு செய்தார்.
ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது 6 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் ஜூன் 15 ம் தேதி தான் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது தாயார் சோனியா காந்தியும் மருத்துவ காரணங்களுக்காக வெளிநாடு சென்றுள்ளார். பிரியங்கா காந்தியும் அவருடன் சென்றுள்ளார்.
மற்றொரு புறம் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் அதே நாளில் மேட்டூர் அணை திறப்பு விழா உள்ளது. முக்கியமான அரசு விழா என்பதால் அதை தவிர்க்க முடியாது. இதனால் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை மற்றொரு நாளைக்கு தள்ளி வைக்கும் படி அவரும் கோரிக்கை வைத்திருந்தார். காங்கிரஸ் மற்றும் திமுக.,வின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சிகளின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜூன் 23ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கக் கூடிய அளவுக்கு சிறப்பான திட்டம் வகுக்கும் அளவுக்கு இந்த கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் ஆகியோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவையும் வரவைக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. அனைத்து வலுவான பிராந்தியக் கட்சிகளையும் இணைத்து ஒருமித்த மனதுடன் அனைவரும் இணைந்து கர்நாடகத்தில் செயல்பட்டது போல செயல்பட்டால் நிச்சயம் வெற்றி என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் உள்ளனர்.
இதற்கிடையே, டெல்லி அதிகாரிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைக்கும் மசோதாவிற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கெஜ்ரிவால் பக்கம் தான் உள்ளன. காங்கிரசிற்கு பலம் சேர்ப்பதற்காக காங்கிரஸ் பக்கம் நிற்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
{{comments.comment}}