மும்பை : ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தரவ் தாக்ரே மிக கடுமையாக, மத்திய அரசை தாக்கி பேட்டி அளித்துள்ளார். தேர்தல் கமிஷனையும், மத்திய அரசையும் மிக கடுமையாக அவர் விமர்சித்து பேசி உள்ளார்.
உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியின் பெயரும், சின்னமும் தங்களுக்கு தான் சொந்தம் என்றும், தாங்கள் தான் உண்மையான சிவ சேனா கட்சி என்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் தரப்பு தேர்தல் கமிஷனில் முறையிட்டது. இவர்களின் கோரிக்கையை பரிசீலித்த தேர்தல் கமிஷன், கட்சியின் பெயரும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தான் சொந்தம் என உத்தரவு பிறப்பித்தது.
இதனை ஏக்நாத் ஷிண்டேவின் தரப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். உண்மை வென்றுள்ளது என ஏக்நாத் ஷிண்டே பேட்டி அளித்திருந்தார். ஆனால் இந்த உத்தரவை உத்தவ் தாக்ரே மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தவ் தாக்ரே அளித்த பேட்டியில், தேர்தல் கமிஷன் மத்திய அரசின் அடிமையாக உள்ளது. நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மோடி பெயரை வைத்து எதுவும் செய்ய முடியாது என்பதனால், தேர்தல் கமிஷனை வைத்து சிவ சேனா கட்சியை சிதைக்க முயற்சிக்கிறார்கள். தேர்தல் கமிஷனின் உத்தரவை எதிர்த்து நாங்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்வோம்.
கட்சியில் தகுநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.,க்கள் வழக்கு நிலுவையில் உள்ள போது கட்சியின் சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷன் முடிவு எடுக்க முடியாது என நாங்கள் கோர்ட்டில் வாதிடுவோம். மாநகராட்சி தேர்தலை வைத்து தான் இப்படி ஒரு வேலையை செய்துள்ளனர். டில்லியில் இருந்த படி மும்பையை கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்.
பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டின் சுதந்திரம் முடிவுக்கு வந்தது, அராஜக ஆட்சி ஆரம்பமாகிறது என அறிவித்தாலும் கூட ஆச்சரிப்படுவதற்கில்லை. வில் அம்பு சின்னம் ஷிண்டே அணிக்கு கொடுத்தது வெறும் பேப்பர் உத்தரவு தான்.ஆனால் கட்சி சின்னம் எப்போதும் எங்களிடம் தான் இருக்கும். அது பால் தாக்ரேவால் உருவாக்கப்பட்டது. அதற்கு நாங்கள் பூஜை செய்து வருகிறோம். விரைவில் அதன் சக்தியை அவர்கள் பார்ப்பார்கள் என்றார்.
{{comments.comment}}