டெல்லி : இந்திய பிரதமர் மோடிக்கு, காலில் விழுந்து வரவேற்பு அளித்துள்ளார் பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர். அதுவும் நாட்டின் வழக்கமான மரபுகளையும் மீறி வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியாவில் நடக்கும் இந்திய- பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்றுள்ளார். இந்திய பிரதமர் ஒருவர் பசிபிக் தீவு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
பப்புவா நியூ கினியா நாட்டு வழக்கப்படி, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வரும் எந்த ஒரு தலைவருக்கும் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும் பழக்கம் கிடையாது. ஆனால் பிரதமர் மோடி இரவு 10 மணிக்கு பிறகு அந்நாட்டில் தரையிறங்கிய போதும், பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராபே நேரிலேயே போய் வரவேற்பு அளித்தார். அவருடன், அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் நேரில் சென்று வரவேற்பு அளித்துள்ளனர்.
விமானத்தில் இருந்து பிரதமர் மோடி இறங்கியதும், அவரது காலை தொட்டு வணங்கி, வரவேற்பு அளித்தார் பப்புவா நியூ கினியா நாட்டு பிரதமர். இதை எதிர்பாராத பிரதமர் மோடி நெகிழ்ந்து போய் அப்படியே ஜேம்ஸைத் தூக்கி முதுகில் தட்டிக் கொடுத்து வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார். இருவரும் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி, அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியாவில் அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து ட்வீட் செய்துள்ள மோடி, பப்புவா நியூ கினியாவிற்கு வந்து விட்டேன். விமான நிலையத்திற்கே நேரில் வந்து அன்பான வரவேற்பு அளித்த பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கு எனது நன்றி. இது மிகவும் ஸ்பெஷலான வரவேற்பு. எப்போதும் இதை மறக்க முடியாது. எனது இந்த வருகையின் போது இந்தியா - பப்புவா நியூ கினியா இடையேயான உறவு மேலும் முன்னெடுத்துச் செல்ல வழிவகை செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
19 குண்டுகள் முழங்க, பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்புடன் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற மோடி, பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து பேசினார்.
2021 ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா சார்பில் பப்புவா நியூ கினியாவிற்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு மருந்துகளை முதலில் பப்புவா நியூ கினியாவிற்கு அனுப்பி வைத்த நாடு இந்தியா தான். தடுப்பு மருந்துகள் சரியான நேரத்திற்கு வராததால் பல விதங்களிலும் சுகாதார நெருக்கடியை பப்புவா நியூ கினியா நாடு அப்போது சந்தித்து வந்தது. இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் பிரதமர் மோடியிடம் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் மராபே என்பது குறிப்பிடத்தக்கது.
{{comments.comment}}