வாஷிங்டன்: இந்தியாவில் மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுமா என்ற கேள்வியே ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியாவின் டிஎன்ஏவிலேயே ஜனநாயகம் உள்ளது. நாங்கள் ஜனநாயகத்தை சுவாசிக்கிறோம், நேசிக்கிறோம்.. எனவே இந்த கேள்வி எழ வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார். பைடனும், அவரும் இணைந்து செய்தியாளர்களையும் சந்தித்தனர். மோடி, பிரதமராகி 9 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், தனியாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வது என்பது இது 2வது முறையாகும். முதல் முறை அவர் இந்தியாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அவருடன் அமித் ஷாவும் இருந்தார். ஆனால் அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மோடி கடைசி வரை பேசவே இல்லை. அமித் ஷா மட்டுமே பேசினார்.
இந்த நிலையில் வாஷிங்டன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மோடி பதிலளித்தார். மிகச் சில செய்தியாளர்கள் மட்டுமே கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இந்தியாவில் மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு மோடி விரிவாக பதிலளித்தார்.
"இந்தியாவும்சரி, அமெரிக்காவும் சரி பரஸ்பரம் மரியாதை செலுத்துவதில் நம்பிக்கை உள்ள நாடுகள். இரு நாடுகளுமே ஜனநாயகத்தை பேணிக் காக்கும் நாடுகள். ஜனநாயக விழுமியங்களைக் காப்பது என்பது இந்தியாவின் டிஎன்ஏவிலேயே உள்ளது.
மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பாக நீங்கள் கேட்ட கேள்வி வியப்பளிக்கிறது. நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயகம் எங்களது ரத்தத்தில் கலந்துள்ளது. நாங்கள் ஜனநாயகத்தை நேசிக்கிறோம், சுவாசிக்கிறோம். அது எங்களது அரசியல் சாசனத்திலேயே உள்ளது.
மனித உரிமைகளுக்கும், மனித மதிப்பீடுகளுக்கும் இடம் இல்லாவிட்டால் அங்கு ஜனநாயகம் கிடையாது. நாங்கள் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்று சொல்லும்போது அங்கு மனித உரிமை மீறல் , பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை.
ஜாதி, மத, இனப் பாகுபாடு இந்தியாவில் கிடையாது. நாங்கள் செயல்படும் அரசு. அனைவருக்குமான அரசு. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே எங்களது கோஷமாகும். அனைவருக்கும் அனைத்து உரிமைகளும், சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன. இதில் மதம், ஜாதி, இடம் என எதுவும் பார்க்கப்படுவதில்லை என்றார் பிரதமர் மோடி.
{{comments.comment}}