டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கில் லேசான சரிவு காணப்படுவதாகவும், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியின் செல்வாக்கில் கணிசமான உயர்வும் காணப்படுவதாக என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டிடிவியும், லோக்நிதி சிஎஸ்டிஎஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. பப்ளிக் ஒப்பீனியன் என்ற பெயரில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மக்கள் அவரது ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதற்காக இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 19 மாநிலங்களில் மே 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. கர்நாடக சட்டசபத் தேர்தல் முடிந்த நிலையில் இக்கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் செல்வாக்கு
நாளையே தேர்தல் நடந்தால் பிரதமராக யாருக்கு நீங்கள் வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு பெரும்பாலானவர்களின் பதில் நரேந்திர மோடிதான். அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஆனால் லேசான சரிவு காணப்படுகிறது. 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தோர் எண்ணிக்கை 44 சதவீதமாக இருந்தது. அது இப்போது 43 சதவீதமாக இறங்கியுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்தல் நடந்தால் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற கேள்விக்கு 43 சதவீதம் பேர் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்திற்கு நாளை தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 40 சதவீதம் பேர் பாஜகவுக்கு என்றும், 29 சதவீதம் பேர் காங்கிரஸுக்கும் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர்.
காங்கிரஸ் வாக்குகள் அதிகரிப்பு
பாஜகவின் வாக்கு சதவீதம் கடந்த 2019ம் ஆண்டு 37 சதவீதமாக இருந்தது. தற்போது அது 39 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், காங்கிரஸுக்கு நல்ல உயர்வு கிடைத்துள்ளது. 2019ம் ஆண்டு 19 சதவீதம் பேரே ஆதரவாக கருத்துக் கூறியிருந்தனர். ஆனால் தற்போது அது 29 சதவீதமாக எகிறியுள்ளது.
பிரதமராக யாரைத் தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு 43 சதவீதம் பேர் நரேந்திர மோடியைத் தேர்வு செய்துள்ளனர். 27 சதவீதம் பேர் ராகுல் காந்தியை கை காட்டியுள்ளனர். கெஜ்ரிவால் 3வது இடத்தில் வருகிறார். மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், நிதீஷ் குமார் உள்ளிட்டோர் அடுத்தடுத்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் திறமை - பேச்சு!
பிரதமர் நரேந்திர மோடியை எதற்காக உங்களுக்குப் பிடி்கும் என்ற கேள்விக்கு, அவருடைய பேச்சுத் திறமைக்காக என்று பெரும்பாலானோர் கூறியுள்ளனர். அதாவது 25 சதவீதம் பேர் பேச்சுத் திறமைக்காக பிடி்கும் என்று கூறியுள்ளனர். வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளுக்காக பிடிக்கும் என்று கூறியோர் 20 சதவீதம். கடின உழைப்பு 13, அவரது வசீகரம் 13, கொள்கைகளுக்காக என்று கூறியோர் 11 சதவீதம் ஆவர்.
{{comments.comment}}