டில்லி : பெங்களுருவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பாஜகவிற்கு எதிராக உருவாகி உள்ள புதிய கூட்டணிக்கு INDIA என பெயர் வைத்துள்ளதாக அறிவித்து, அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டில்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, NDA விற்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளார்.
2024 ம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக.,வை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றன. முதல் கூட்டம் பாட்னாவில் நடந்த நிலையில், இரண்டாவது கூட்டம் நேற்றும், இன்றும் பெங்களுருவில் நடைபெற்றது. இதற்கு பாஜக.,வும் தங்களின் பலத்தை நிரூபிக்க தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தை டில்லியில் இன்று மாலை நடத்தியது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, என்டிஏ.,வை பொறுத்த வரை நாடு, நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, மக்களின் முன்னேற்றம் தான் முதலில். அரசியலில் போட்டி இருக்கலாம். ஆனால் பகை இருக்கக் கூடாது. ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி ஒரு சூழலை தான் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அரசியல் பாகுபாடின்றி நாட்டின் நலனை தான் உயர்வாக கருதுகிறோம். பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா வழங்கியதும், முலாயம் சிங்ல சரத் பவார் உள்ளிட்டோருக்கு பாகுபாடின்றி பத்ம விருது வழங்கி கெளரவித்தது பாஜக அரசு தான்.
நாங்கள் எங்போதும் பாசிடிவ் பாலிடிக்ஸ் தான் செய்கிறோம். எதிர்க்கட்சி அரசுகளுக்கு எதிராக நாங்கள் வேறு யாருடைய உதவியையும் நாடவில்லை. ஆனால் அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக நாங்கள் கொண்டு வரும் அத்தனை முயற்சி, திட்டங்களுக்கும் எதிராக முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். NDA = N-New India, D- Development, A- Aspiration.
2024 தேர்தலில் என்டிஏ.,வின் ஓட்டு சதவீதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் போது உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும். அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. 2024 தேர்தல் வெகு தொலைவில் இல்லை. மீண்டும் என்டிஏ.,விற்கு வாய்ப்பு கொடுக்க மக்கள் மனதளவில் தயாராகி விட்டனர். இவ்வாறு மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
{{comments.comment}}