போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி நகரில் ஒரு பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த மனித மிருகத்தை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த கொடூரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டிவிட்டர் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் நேற்று ஒரு வீடியோ வலம் வந்தது. அதைப் பார்த்த அத்தனை பேரும் மனம் கொதித்துப் போனார்கள். அந்த வீடியோவில் ஒரு பழங்குடியின இளைஞர் பிளாட்பாரத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு எதிரே நின்று கொண்டிருந்த ஒரு நபர், பழங்குடியின இளைஞர் மீது கொஞ்சம் ஈவு இரக்கமே இல்லாமல், மனித நேயமே இல்லாமல், சிறுநீர் கழிக்கிறார்.
அந்த பழங்குடியின இளைஞர் எந்த எதிர்ப்பையும் காட்ட முடியாமல் தவித்துப் புழு போல நெளிகிறார். பார்க்கவே இதயத்தை அறுத்துப் போடுவதாக இருந்தது அந்த வீடியோ காட்சி. இந்த குரூரன் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டனங்கள் குவிந்தன. இந்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி நகரில் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் கட்சியும் இந்த சம்பவத்தை கையில் எடுத்து உரத்துக் குரல் கொடுத்தது. சித்தி காங்கிரஸ் எம்எல்ஏ குனால் செளத்ரி இதுகுறித்துக் கூறுகையில், சம்பவம் நடந்து 2 நாட்களாகி விட்டது. இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர் வெறுமனே டிவீட் போட்டுக் கொண்டிருக்கிறார். எங்கே போய் விட்டது அவரது புல்டோசர் என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் அந்த அக்கிரமச் செயலில் ஈடுபட்டவர் பெயர் பர்வேஷ் சுக்லா என்றும், அவர் பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவுக்கு நெருக்கமானவர் என்றும் இன்னொரு தகவல் வெளியானது. இதனால் அரசியல் பிரச்சினையாகவும் இது மாறியது.
நெருக்கடி அதிகரித்த நிலையில் போலீஸ் நடவடிக்கை பாய்ந்தது. அந்த நபரைக் கைது செய்த போலீஸார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்து சித்தி மாவட்ட கூடுதல் எஸ்.பி. அஞ்சுலதா பாட்லே கூறுகையில், பர்வேஷ் சுக்லா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பர்வேஷ் சுக்லா மீது 294, 504 ஐபிசி மற்றும் எஸ்சி எஸ்டி சட்டப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
பாஜக எம்எல்ஏ மறுப்பு
இதற்கிடையே பர்வேஷ் சுக்லாவுக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அவர் எனது பிரதிநிதி என்று சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. இதை முதல்வரிடமே நான் சொல்லிவிட்டேன். அவர் எனது பகுதியைச் சேர்ந்தவர் என்ற வகையில் மட்டுமே அவரை எனக்குத் தெரியும் என்று கேதார்நாத் கூறியுள்ளார்.
எந்தக் காலத்தில் பர்வேஷ் சுக்லா போன்ற முட்டாள்கள் வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை. நாய்கள் கூட சக நாய்கள் மீது இதுபோன்ற அசிங்கத்தில் ஈடுபடாது. இதேபோலத்தான் கேரளாவில் ஒரு பழங்குடியின இளைஞரான மது என்பவர் சாப்பாட்டை எடுத்து விட்டதாக கூறி ஒரு கும்பல் அடித்தே கொன்ற அக்கிரமம் நடந்தது. இப்போது மத்தியப் பிரதேசத்தில் இந்த அராஜகம் நடந்துள்ளது. எப்போதுதான் இதுபோன்றவர்கள் திருந்தப் போகிறார்களோ.
{{comments.comment}}