கொல்கத்தா: கர்நாடகாவில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதுவரை அக்கட்சியை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டிய முக்கிய கட்சிகள் இப்போது காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.
காங்கிரஸ் தலைமையில் தேசிய அளவில் வலுவான எதிர்க்கட்சி கூட்டணி அமைய வேண்டும். அப்படி நடந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அதை பல முக்கிய எதிர்க்கட்சிகள் புறம் தள்ளி வருகின்றன. குறிப்பாக மமதா பானர்ஜி, கே.சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் காங்கிரஸை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ் பெற்ற அதிரடி வெற்றி மமதா உள்ளிட்டோரையும் சேர்த்து உலுக்கி விட்டது. இப்போது மமதா பானர்ஜி காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
சமீப காலம் வரை திரினமூல் காங்கிரஸ் தனியாக கூட்டணி அமைக்கும். அதில் சமாஜ்வாடிக் கட்சி, பிஜூ ஜனதாதளம் உள்ளிட்டவை இடம் பெறும் என்று மமதா பானர்ஜி கூறி வந்தார். காங்கிரஸை தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். ஆனால் தற்போது அவரது போக்கில் மாற்றம் தென்படுகிறது. வலுவான எதிர்க்கட்சி கூட்டணிக்கு தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார் மமதா. அதேசமயம், காங்கிரஸையும் மேம்போக்காக வாரியுள்ளார். மேற்கு வங்காளத்தில் பாஜக வளர காங்கிரஸே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிராந்தியக் கட்சிகள் வலுவாக இருந்தால் பாஜகவால் அவர்களை வெல்ல முடியாது. பாஜக நாட்டை அழித்து விட்டது. பொருளாதாரத்தை சீரழித்து விட்டது. ஜனநாயக நெறிமுறைகள் புல்டோசர் வைத்து தகர்க்கப்பட்டு விட்டது. விளையாட்டு வீராங்கனைகள் கூட தலைநகரில் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கர்நாடகத் தீர்ப்பு ஒட்டுமொத்த மக்களுக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இது நாட்டுக்கான தீர்ப்பு. பாஜகவுக்கு எதிரான தீர்ப்பு. இந்த நிலையில் அனைத்துப் பிராந்தியத்திலும் உள்ள வலுவான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அனைவரும் இணைய வேண்டும். ஆம் ஆத்மி, திமுக, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை இணைய வேண்டும். இவர்கள் எல்லாம் ஏற்கனவே காங்கிரஸுடன் இணைந்துள்ளனர். அது தொடர வேண்டும்.
அதேசமயம், எந்தப் பிராந்தியத்தில் எந்தக் கட்சி வலுவாக இருக்கிறதோ அந்தக் கட்சிக்கு அதிக வாய்ப்பு தரப்பட வேண்டும். காங்கிரஸ் எங்கெல்லாம் வலுவாக இருக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் வெல்ல வேண்டும். அவர்களுக்கு நாம் ஆதரவாக இருப்போம். காங்கிரஸ் கட்சி பிராந்தியக் கட்சிகளை ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் பிராந்தியக் கட்சிகள், காங்கிரஸை ஆதரிக்கும். ஆனால் மேற்கு வங்காளத்தில் அவர்கள் பாஜக வளர உதவுகிறார்கள் என்றார் மமதா பானர்ஜி.
காங்கிரஸை ஆதரிக்க மாட்டோம் என்று பிடிவாதமாக கூறி வந்த மமதா தற்போது இந்த அளவுக்கு இறங்கியிருப்பது முக்கியமானது. இனி வரும் தேர்தல்களிலும் காங்கிரஸ் அதிரடி வெற்றிகளைக் குவித்தால் மமதா மேலும் இறங்கி வருவார் என்று நம்பலாம். மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்து சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. அதில் காங்கிரஸ் கூட்டணி வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக இப்போதே பேச்சு அடிபடுகிறது. எனவே மமதா மேலும் இறங்கி வரும் வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளது.
{{comments.comment}}