மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வந்த சித்திரை திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக சித்திரரை திருத்தேரோட்டம் மே 03 ம் தேதியான இன்று காலை நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழா ஏப்ரல் 30 ம் தேதி நடைபெற்றது. மே 01 ம் தேதி திக் விஜயமும், மே 02 ம் தேதி மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் சித்திரை திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
காலை 5 மணிக்கு அம்மனும், சுவாமியும் திருத்தேரில் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 06.30 மணிக்கு மேல் பெரிய தேரில் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மனும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் கோவிலை சுற்றி உள்ள நான்கு மாசி வீதிகளில் வலம் வந்தனர். கிழக்கு மாசி வீதியில் துவங்கிய தேரோட்டம், மீண்டும் கிழக்கு மாசி வீதியை பிற்பகலில் வந்தடையும். லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுந்தனர். " ஹர ஹர சங்கரா" என்ற கோஷத்துடன் நடைபெற்ற சித்திரை தேரோட்டம் காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.
வழக்கமான கோடை வெயிலின் தாக்கம் இன்றி, கடந்த சில நாட்களாக மதுரையில் பெய்து வரும் தொடர் மழையால் மதுரையில் குளுமையான காலநிலை நிலவுகிறது. இதனால் சித்திரை திருவிழாவில் வழக்கத்தை விட அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக மதுரையில் போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தேரோட்டத்துடன் மீனாட்சி அம்மன் ���ோவிலில் நடக்கும் சித்திரை திருவிழா நிறைவடைவதை தொடர்ந்து வைகை ஆற்றின் வடகரையில் நடைபெறும், சித்திரை திருவிழாவின் இரண்டாம் பகுதி மே 04 ம் தேதியான நாளை துவங்க உள்ளது. நாளை, அழகர்மலையில் இருந்து மதுரை வரும் கள்ளழகருக்கு மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும். இதைத் தொடர்ந்து மே 05 ம் தேதி அதிகாலை ஆயிரம் பொன் சப்பரத்தில், தங்க குதிரையில், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளது.
பிறகு மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல், ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சி உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து கள்ளழகர் கோலத்தில் பெருமாள் மீண்டும் அழகர்மலைக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்வு நடைபெற உள்ளது.
{{comments.comment}}