சென்னை: முழங்கால் வலியுடன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோனி விளையாடியதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை கண்ணீர் விட வைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல்லில் அசைக்க முடியாத கிங்காக ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது. இதுவரை 4 முறை கோப்பையை வென்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு கோப்பையை அற்புதமாக தட்டிச் சென்றது.
இந்த ஆண்டு சீசனில் தோனியின் கேப்டன்சி அனைவரையும் அசர வைத்து விட்டது. அவரது வியூகங்கள், அவர் வீரர்களைப் பயன்படுத்திய விதம், ஆடிய விதம் என எல்லாமே கிளாஸ்! குறிப்பாக இறுதிப் போட்டி பல விதங்களிலும் தோனிக்கு முக்கியமானதாக மாறி விட்டது. முதலில் இறுதிப் போட்டி நடக்குமா என்பதே சந்தேகமாகி விட்டது. மழை வந்து முதல் நாளை கெடுத்தது. அடுத்த நாளும் மழை குறுக்கிட்டது. ஆனால் அதையும் தாண்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காட்டிய அதிரடியை தோனியால் மறக்கவே முடியாது.
இந்த சீசனை தோனியால் இன்னொரு காரணத்திற்காகவும் மறக்க முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எங்கு போனாலும் ரசிகர்கள் இருப்பது உண்மைதான். எல்லோரும் தோனிக்காக தானாக சேரும் கூட்டம். ஆனால் இந்த முறை சென்னை அணி எங்கெல்லாம் விளையாடியதோ அங்கெல்லாம் அரங்கத்தை நிரப்பியது தோனி படைதான். இது வரலாறு காணாதது. அதைப் பார்த்து தோனியே நெகிழ்ந்து போய் விட்டார்.
இந்த நிலையில்தான் அவரது ஓய்வு குறித்த பேச்சு அதிகரித்துக் கொண்டே போனது. ஆனால் அவர் உண்மையிலேயே ஓய்வு பெறும் நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அவர் முழங்கால் வலியுடன்தான் விளையாடியுள்ளார் போலும். இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் விளையாடத் தயாராவதற்கு முன்பு தனியாக அமர்ந்து தனது முழங்கால் கேப்பை மாட்டிக் கொண்டிருக்கிறார் தோனி. இறுதிப் போட்டியில் விளையாடத் தயாராவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ போல தெரிகிறது. இந்த வீடியோ ரசிகர்களை நெகிழ வைத்து விட்டது.
தோனிக்கு முழங்காலில் பிரச்சினை உள்ளதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரி காசி விஸ்வநாதனும் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பையில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்களுடன் தோனி ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பின்னர் தனது ஓய்வு குறித்து அவர் முடிவெடுப்பார் என்றார்.
இந்தத் தொடர் முழுவதுமே முழங்கால் பகுதியில் கனமான ஸ்டிராப்பைக் கட்டியபடிதான் விளையாடினாராம் தோனி. கிரேட் மனுஷன்தான் தோனி.. சந்தேகமே இல்லை.
{{comments.comment}}