சென்னை : வழக்கறிஞர்கள் எதிர்ப்பு, வழக்கு ஆகியவற்றை கடந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரி இன்று (பிப்ரவரி 07) காலை பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக அவரது பதவியேற்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் பட்டியலினத்தவருக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் என கூறி விக்டோரியா கெளரி கூடுதல் நீதிபதியாக பதவியேற்பதற்கு மூத்த வழக்கறிஞர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். விக்டோரியா கெளரியின் நியமனத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விக்டோரியா கெளரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவியேற்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட், பிப்ரவரி 10 ம் தேதி மனுவை விசாரிக்க பட்டியலிட்டது. ஆனால் விக்டோரியா கெளரி உள்ளிட்ட 11 வழக்கறிஞர்கள் மற்றும் 2 மாவட்ட நீதிபதிகளை, ஐகோர்ட் கூடுதல் நீதிகளாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் விக்டோரியா கெளரி வழக்கை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
ஆனால் பட்டியலிடப்பட்ட வழக்கு என்பதால் நீதிபதிகள் யாரும் வரவில்லை. இதனால் இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கண்ணா மற்றும் கவாய் ஆகியோர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இன்று 10.30 மணிக்கு இந்த வழக்கு விசாரிக்கப்படும் என பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், 10.35 மணிக்கு விக்டோரியா கெளரி பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் என்ன நடக்கும் என அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பதவியேற்பு விழாவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். மேலும் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பாஜகவில் இருந்தவர், இஸ்லாமிய, கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு எதிராக பேசியவர் என்பது நீதிபதி விக்டோரியா கெளரி மீது வழக்கறிஞர்கள் வைத்த புகார் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
{{comments.comment}}