சென்னை : பாஜகவை சேர்ந்த டெய்சியின் மகளான "டாக்டர் ஷர்மிகா", சித்த மருத்துவராக உள்ளார். இவர் மருத்துவத்துறையில் பிரபலமானதை விட சோஷியல் மீடியாவில் செம பாப்புலர். பல மருத்துவக் குறிப்புக்களை யூட்யூப்பில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். மிக எளிமையாக மருத்துவக் குறிப்புக்கள் சொல்லியே பிரபலமானவர்.
பாப்புலர் ஆகி விட்டாலே சர்ச்சைகள், ட்ரோல்கள் வரத்தான் செய்யும். ஆனால் டாக்டர் ஷர்மிகா அவராக வாயை கொடுத்து மாட்டிக் கொண்டுள்ளார். அவர் இஷ்டத்துக்கு அடித்து விட்ட வீடியோக்களால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நுங்கு சாப்பிட்டால் பெண்களுக்கு மார்பகங்கள் பெரிதாகும், மாட்டு இறைச்சி சாப்பிட்டால் செரிக்காது, கடவுள் மனது வைத்தால் தான் குழந்தை பிறக்கும், குலோப் ஜாமுன் சாப்பிட்டால் உடல் எடை 3 கிலோ வரை கூடும் என வாய்க்கு வந்ததை பேசி வீடியோ வெளியிட துவங்கி விட்டார். இதை சோஷியல் மீடியாவில் கலாய்த்தவர்களையும் கண்டித்து வீடியோ வெளியிட்டார்.
இதனால் தவறான மருத்துவ குறிப்புக்களை வழங்கி வருவதாக ஷர்மிகா மீது புகார் எழுந்தது. இதனை அடுத்து தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறி இருந்தது. இதனையடுத்து தான் ஒரு "ப்ஃளோ"வில் பேசி விட்டதாகவும், தன்னை மன்னித்து விடும் படியும் ஷர்மிகாஅறிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் டாக்டர் ஷர்மிகாவின் சர்ச்சை பேச்சு விவகாரம் இந்திய அளவில் விஸ்வரூபம் எடுக்க துவங்கி விட்டது. இவர் மீது வந்த தொடர் புகார்களின் காரணமாக உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி, தான் யூட்யூப்பில் தெரிவித்த தவறான மருத்துவக் குறிப்புக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என ஷர்மிகாவிற்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாக்டர் ஷர்மிகா கூறி தவறான மருத்துவ குறிப்புக்களை விட, மன்னிப்பு கேட்கிறேன் என்ற பெயரில், ஒரு ப்ஃளோவில் சொல்லி விட்டேன் என விளக்கம் அளித்திருப்பது தான் பலரையும் கடுப்பாக்கி உள்ளது. "ஒரு பொறுப்பான மருத்துவர் இப்படியா பொறுப்பில்லாமல் பதில் சொல்வது. இவரை நம்பி எப்படி நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்" என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
{{comments.comment}}