சென்னை: ஐசிசி உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் சென்னையில்தான் இந்தியாவின் முதல் போட்டி நடைபெறவுள்ளது. அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் இப்போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திக்கவுள்ளது.
2023 ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் தொடர்பான முழுமையான அதிகாரப்பூர்வமான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
மொத்தம் 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 46 நாட்கள் போட்டிகள் நடைபெறும். அக்டோபர் 5ம் தேதி முதல் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும். அப்போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் கலந்து கொண்டு மோதவுள்ளன.
இந்தியாவின் முதல் போட்டி
இந்தியா கலந்து கொள்ளும் முதல் போட்டியானது அக்டோபர் 8ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் ஐந்து முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவை, 2 முறை கோப்பை வென்ற இந்தியா சந்திக்கவுள்ளது.
சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது. இந்த மைதானத்தில் பல உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சுழற்பந்து வீச்சில் இந்தியா கில்லாடி. அதேசமயம், ஆஸ்திரேலியா தடுமாற்றம் அடையும். எனவே சென்னை மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டி இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
அதேசமயம், ஐபிஎல் அனுபவம் ஆஸ்திரேலியாவுக்கும் கை கொடுக்கும் என்பதால் அவர்களை எளிதில் குறைத்து மதிப்பிட்டு விடாது என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். யார் என்ன சொன்னா என்ன.. நம்ம சென்னையில் இந்தியாவின் முதல் உலகக் கோப்பை போட்டி நடைபெறப் போகிறது.. அது போதாதா.. திருவிழா மாதிரி கொண்டாட ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர்.
{{comments.comment}}