பெங்களூர்: கர்நாடக பாஜக எப்படி அண்ணாமலை ஐபிஎஸ்ஸை பெரிதாக நம்பியதோ, அதேபோல கர்நாடக காங்கிரஸுக்காக இறங்கி வேலை பார்த்தவர் சசிகாந்த் செந்தில். ஆனால் அண்ணாமலையால் சாதிக்க முடியாததை, சசிகாந்த் செந்தில் சாதித்துக் காட்டியுள்ளார்.
அண்ணாமலையும் சரி, சசிகாந்த் செந்திலும் சரி தமிழ்நாடுதான் அவர்களது பூர்வீகம். அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக வலம் வந்தவர். சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் அதிகாரியாக வலம் வந்தவர். சசிகாந்த் செந்தில் சித்ரதுர்கா உள்ளிட்ட சில மாவட்டங்களில் கலெக்டராக இருந்தவர். பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை.
இருவருக்குமே கர்நாடகத்தின் அடிநாதம் அத்துப்படி. குறிப்பாக மக்களின் தேவைகள், பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்துமே நன்றாகத் தெரியும். இருவருமே தங்களது பணிகளை விட்டு விலகி அரசியலுக்கு வந்தவர்கள். இருவரில் ஒருவர் பாஜக பக்கம் திரும்ப, இன்னொருவர் காங்கிரஸுக்கு வந்தார்.
அண்ணாமலை - சசிகாந்த் செந்தில்
அண்ணாமலைக்கு கட்சியில் சேர்ந்த சில காலத்திலேயே மாநிலத் தலைவர் பதவி தேடி வந்தது. ஆனால் சசிகாந்த் செந்திலுக்கு அதுபோன்ற எந்தப் பெரிய பொறுப்பும் கிடைக்கவில்லை. காரணம், தமிழ்நாடு காங்கிரஸின் நிலவரம் அப்படி. ஏகப்பட்ட கோஷ்டிகள்.. சீனியர்கள்.. இதையெல்லாம் தாண்டி ஒரு புதியவர் தலைவராவது என்பது கனவில் கூட நடக்காதது. ஆனால் சசிகாந்த் செந்தில் எந்தப் பதவியையும் எதிர்பார்க்கவும் இல்லை.
இந்த நிலையில்தான் கர்நாடக சட்டசபைத் தேர்தல் களத்தில் இறக்கி விடப்பட்டார் சசிகாந்த் செந்தில். ராகுல் காந்தியின் யோசனைப்படி, கர்நாடக தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளை சசிகாந்த் செந்தில் டீம் மேற்கொண்டது. வார் ரூம் அமைத்து இவர்கள் தீவிரமாக செயல்பட்டனர். மறுபக்கம் அண்ணாமலை வசம் சில தொகுதிகளை ஒப்படைத்து அவற்றில் பாஜக வெல்லும் வாய்ப்புகளை உறுதி செய்ய அவரை இறக்கி விட்டது பாஜக.
கர்நாடகத்தில் பிரச்சாரம்
இந்த இருவரும் இறங்கி தீயாய் வேலை செய்தனர். அண்ணாமலை செய்த செயல்கள்தான் அதிகமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து புகைப்படங்களைப் போட்டபடி இருந்தனர். அண்ணா இங்கு பிரச்சாரம் செய்தார்.. அண்ணாவுக்கு இங்கு கூடிய கூட்டம் என்று புகைப்படம் வராத நாளே இல்லை. ஆனால் சசிகாந்த் செந்தில் டீமின் பணிகள் குறித்து பெரிதாக வெளிப்படுத்தப்படவில்லை, அவர்களும் அதை பிரச்சாரம் செய்யவில்லை.
ஆனால் இன்று பாஜக ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது, அதிலும் சூப்பரான பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து அசத்தியுள்ளது. இந்த நிலையில் சசிகாந்த் செந்திலின் டீம் வெகுவாக பாராட்டப்படுகிறது, பேசப்படுகிறது.. சத்தம் போடாமல், அமைதியாக இருந்து சாதித்துக் காட்டியுள்ளார் சசிகாந்த் செந்தில் என்று அவரும் பாராட்டப்படுகிறார். மிகவும் அழகாக பணிகளை ஒருங்கிணைத்து கர்நாடக காங்கிரஸின் வெற்றியை சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொண்டு வந்து விட்டது செந்திலின் டீம் என்று பாராட்டப்படுகிறது.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலில் ஹீரோ என்று கூறப்படுகிறது. இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணியிலும் சசிகாந்த் செந்தில் முக்கியப் பங்காற்றியுள்ளாராம். குறிப்பாக கிருஹஜோதி யோஜனா திட்டம் (வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம்),அன்ன பாக்கியா (வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி), கிருஹலட்சுமி யோஜனா (இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2000 உதவித் தொகை), யுவ நிதி (வேலையில்லாதப் பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ. 3000 உதவித் தொகை) உள்ளிட்ட திட்டங்கள் சசிகாந்த் செந்திலின் யோசனைகள் என்று கூறப்படுகிறது.
சசிகாந்த் செந்தில் டீமின் முக்கிய வேலையே மக்கள் என்ன நினைக்கிறார்கள், மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன, அவர்களிடையே பேசு பொருளாக உள்ள பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப காங்கிரஸ் செயல் திட்டத்தை வகுத்ததே. இதனால்தான் மக்களோடு மக்களாக காங்கிரஸ் கட்சியால் இயல்பாக கலக்க முடிந்ததாக கூறப்படுகிறது. ஒரு மிகப் பெரிய பணியை படு சாதாரணமாக அமைதியாக செய்து சாதித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இந்த தேர்தலில் கிடைத்த வெற்றியின் மூலமாக "கர்நாடக காங்கிரஸ் மாடல்" செயல்திட்டம் நாடு முழுவதும் பரவும் என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் ஐபிஎஸ்ஸால் சாதிக்க முடியாததை, ஐஏஎஸ் சாதித்து விட்டது.. !
{{comments.comment}}