அகமதாபாத்தில்.. நேத்து ராத்திரி என்ன நடந்தது.. வாங்க ரீவிசிட் அடிப்போம்!

May 30, 2023,11:46 AM IST
அகமதாபாத்: ஐ.பி.எல் தொடரின் 16வது சீசன் பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற திரில் வெற்றியை இந்த நொடி வரை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

போட்டி நடக்குமா.. எப்ப நடக்கும்.. எப்படி நடக்கும்.. சென்னை மீண்டும் சாம்பியன் ஆகுமா என்றெல்லாம் இறுதிப் போட்டி குறித்து ஒரு வகையான குழப்பம் நிலவி வந்த நிலையில் நடு மண்டையில் நச்சுன்னு ஆணி அடித்தாற் போல ஒரு வெற்றியைக் கொடுத்துள்ளது தோனி படை.



கடைசி ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஜடேஜா வெற்றியை உறுதி செய்ய.. மொத்த அகமதாபாத்தும் அதிர்ந்தது.. சென்னையிலும், தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் வீடு வீடா கொண்டாடிக் கொண்டுள்ளனர். 

நேற்று நடந்த "சம்பவம்"  அத்தனை சீக்கிரம் மறக்க முடியாதது.. வாங்க அதை மறுபடியும் அசை போடுவோம்..



ஐ.பி.எல்., தொடரின் 16வது சீசனின் பைனல் நேற்று முன்தினம் (மே 28) குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால் மழை காரணமாக நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. ‘நான்கு முறை சாம்பியன்’ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ‘நடப்பு சாம்பியன்’ குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற சி.எஸ்.கே., அணி கேப்டன் ‘தல’ தோனி ‘பவுலிங்’ தேர்வு செய்தார். மழை பெய்யும் அச்சம் இருப்பதால் சேஸிங் செய்கையில் திட்டமிட்டு செயல்படும் நோக்கில் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.

இதனையடுத்து குஜராத் அணிக்கு சுப்மன் கில், விருத்திமான் சகா நல்ல ஓபனிங் கொடுத்தனர். 3 ரன்னில் சுப்மன் கில் கொடுத்த கேட்சை சென்னையின் தீபக் சகார் நழுவவிட்டார். பின்னர் துவக்க வீரர்கள் இருவரும் அதிரடியில் இறங்கினர். ‘பவர் பிளே’ எனப்படும் முதல் 6 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது. 7வது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீச வந்தார். அதன் கடைசி பந்தில் தோனியின் ‘அதிவேக’ ஸ்டெம்பிங்கில் சுப்மன் கில் 39 ரன்னில் வெளியேறினார்.



சாய் சுதர்சன்

பின்னர் சகா உடன் இணைந்த சாய் சுதர்சன், சி.எஸ்.கே வீரர்களின் பந்துகளை நாலாபக்கமும் சிதறடித்தார். இதற்கிடையே 36 பந்தில் அரைசதம் அடித்த சகா, 54 ரன்னுக்கு அவுட்டானார். அதிரடியை கைவிடாத சாய் சுதர்சன், தீக்சனா ஓவரில் 2 சிக்சர் விளாசி, 33 பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து மிரட்டிய சுதர்ஷன், தேஷ்பாண்டே ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி அடிக்க, 20 ரன் எடுக்கப்பட்டன. தேஷ்பாண்டேவின் அடுத்த ஓவரில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஒரு சிக்சர், சுதர்ஷன் ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, 18 ரன் எடுக்கப்பட்டன. பதிரனா வீசியா கடைசி ஓவரில் வரிசையாக இரு சிக்சர் விளாசிய சுதர்ஷன், 96 ரன்னுக்கு(47 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். கடைசி பந்தில் ரஷித் கான் ‘டக் அவுட்’ ஆனார். குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன் எடுத்தது.

கடினமான இலக்குடன் சென்னை அணிக்கு வழக்கம்போல் ருத்ராஜ் கெய்க்வாட், டேவிட் கான்வே துவக்கம் தந்தனர். 3 பந்தில் 4 ரன் எடுத்திருந்தபோது பலத்த மழை கொட்டியது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் தடைப்பட்டது. மழை ஓய்ந்ததும், நள்ளிரவு 12:10 மணிக்கு போட்டி மீண்டும் தொடர்ந்தது. 15 ஓவரில் 171 ரன் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது. இதனால் சென்னை அணி வீரர்களும் தங்கள் பங்கிற்கு வெளுத்து வாங்கினர். இருவரும் பவுண்டரி மழை பொழிய, 6 ஓவரில் 72 ரன் எடுக்கப்பட்டன.



கோல்டன் டக்

7வது ஓவரை வீசிய ஆப்கானிஸ்தானின் 18 வயது நுார் அகமது, சி.எஸ்.கே., அணிக்கு இரட்டை ‘செக்’ வைத்தார். ருத்ராஜ்(26), கான்வே(47) ஒரே ஓவரில் அவுட்டாக்கினர். பின் ஷிவம் துபே, ரகானே சேர்ந்து ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டனர். முக்கியமான கட்டத்தில் மோகித் சர்மா பந்தில் ரகானே (27) வீழ்ந்தார். தனது கடைசி போட்டியில் பங்கேற்கும் அம்பதி ராயுடு தன்பங்கிற்கு மோகித் சர்மா ஓவரில் இரு சிக்சர், பவுண்டரியை அடுத்தடுத்து பறக்கவிட்டு, 19 ரன்னில் அவுட்டானார். அதற்கு அடுத்த பந்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய ‘தல’ தோனி முதல் பந்திலேயே ‘கோல்டன் டக்’ ஆனார். இதனால் மொத்த ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கடைசி ஓவரில் சி.எஸ்.கே வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டன. மோகித் சர்மா ‘யார்க்கராக’ பந்துவீசி நெருக்கடி கொடுத்தார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுக்கப்பட்டன. இதனால் ரசிகர்களுக்கு ‘டென்ஷன்’ எகிறியது. கடைசி இரண்டு பந்தில் 10 ரன் தேவைப்பட்ட நிலையில், 5வது பந்தில் ஜடேஜா சூப்பர் சிக்சர் அடிக்க, சென்னை ரசிகர்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். கடைசி பந்தில் பவுண்டரி அடித்த ஜடேஜா, சி.எஸ்.கே அணியின் கோப்பை கனவை நனவாக்கினார். சென்னை அணி 15 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா(15), ஷிவம் துபே(32) அவுட்டாகாமல் இருந்தனர்.

சாதனை சமன்

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல்., தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதன்மூலம் ஐ.பி.எல்.,லில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான வரிசையில் முதலிடத்தை மும்பை இண்டியன்ஸ் அணியுடன் பகிர்ந்து கொண்டது. இரு அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

அந்த வகையில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் தலா ஒரு முறையும் கோப்பை வென்றுள்ளன.



தமிழ்நாடு – குஜராத்

இந்த பைனலில் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் குஜராத் அணியிலும், குஜராத்தை சேர்ந்த ரவீந்திர ஜடேஜா சென்னை அணியிலும் விளையாடினர். அதில், தமிழ்நாட்டை சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த சாய் சுதர்சன் 47 பந்தில் 96 ரன் சேர்த்து, சென்னை அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்க காரணமாக அமைந்தார். அதேநேரத்தில் குஜராத் அணிக்கு எதிராக அதே மாநிலத்தை சேர்ந்த ஜடேஜா, முக்கியமான சுப்மன் கில் விக்கெட்டை எடுத்தது மட்டுமல்லாமல், கடைசி இரு பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்து சென்னை அணிக்கு கோப்பையையும் வென்று தந்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்