"தன்னான தானா".. 10 நாட்களாகியும்.. ரசிகர்களை பிரமிக்க வைக்கும்... "மாமன்னன்"

Jul 09, 2023,05:12 PM IST
சென்னை:  பத்து நாட்களாகியும் கூட... மாமன்னன் இன்னும் வலுவாக பேசப்படுகிறான்.. காரணம் அழுத்தமான கதை.. பொட்டில் அறைந்தார் போல இருக்கின்றன ஒவ்வொரு காட்சியும். மாமன்னன்களைப் பற்றிப் பேசுவது இந்தக் காலத்திற்கு மிகவும் அவசியமும் கூட.

ஜாதி எங்கே சார் இருக்கு.. அதெல்லாம் அந்தக் காலம்.. இது "பெரியார் மண்".. இப்படியெல்லாம் இன்றும் கூட பலர் பேசிக் கொண்டிருந்தாலும்.. அவர்களுக்குப் பின்னர் வேங்கை வயலின் வேதனைச் சிரிப்பு முதுகைத் தொட்டுக் கொண்டுதானே இருக்கிறது. ஜாதியக் கொடுமைகள் ஓரளவுக்குக் குறைந்திருந்தாலும் கூட 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் ஜாதியக் கொடுமைகளின் உச்சத்தை நாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்..  அந்த வெறி இன்றும் கூட பல பகுதிகளில் தலைவிரித்தாடியபடிதான் இருக்கிறது.




அப்படிப்பட்ட ஒரு  கொடுமையின் ஒரு துளியைத்தான் மாமன்னனாக நடமாட விட்டுள்ளார் மாரி செல்வராஜ். கொங்கு மண்டலத்தில் நடப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இரு அரசியல்வாதிகள். ஒருவர் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்.. இன்னொருவர் அவர்களது அடிமையாகவே காலம் காலமாக பார்க்கப்பட்டு வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். இருவரும் அரசியலில் ஒரு சேர வளருகிறார்கள். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் அரசியலில் படிப்படியாக முன்னேறி எம்எல்ஏவும் ஆகிறார்.. ஆனால் அவரது வளர்ச்சி என்பது அரசியலில் மட்டுமே... சமுதாயத்தைப் பொறுத்தவரை அவர் அடிமையாகவே இருக்கிறார்.

எதிர்த்துப் பேசாமல், அடித்துக் கேட்காமல், உரத்த குரலில் உரிமைக் குரல் எழுப்பாமல்.. இது இப்படித்தான்.. இவர்கள் இப்படித்தான்.. நாம் நமது வேலையைப் பார்ப்போம் என்ற அளவுக்கு தனக்குத்தானே கோடு போட்டுக் கொண்டு குமுறலை உள்ளுக்குள் அடக்கியபடி வருடங்களைத் தாண்டி வந்து சேருகிறார். அவரது மகனுக்கும், அவர் சார்ந்த கட்சியின் மாவட்டச் செயலாளருக்கும் இடையிலான உரசல் பெரும் மோதலாகிறது.. அந்த மோதல் ஜாதிய ரீதியில் விஸ்வரூபம் எடுக்கிறது. இருவருக்கும் இடையிலான மோதல் எப்படி முடிகிறது.. என்ன ஆகிறது என்பது படத்தின் கதை.

இந்தக் கதை கொங்கு மண்டலத்தில் நடப்பதாக காட்டப்பட்டாலும் கூட.. எல்லாப் பக்கமும் அன்றாடம் நாம் சந்தித்த, சந்தித்து வரும் அதே அடக்குமுறைகள்தான். பட்டியலின மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் சந்தித்த அதே கொடுமைகள்தான்.. கோவில் கிணற்றில் குளித்த பட்டியலின சிறுவர்களை கல்லால் அடிக்கும் கொடூரம்.. "நீ உக்காரு.. அப்பா உட்கார மாட்டார்.. அது அப்படித்தான்" என்ற ஜாதிய வக்கிரக் குரல்... படம் முழுக்க விரவி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.. ஜாதியத்தின் கொடூர முகங்கள். ஒவ்வொன்றையும் சொல்லிச் சொல்லி அடித்துள்ளார் மாரி செல்வராஜ்.

இந்தப் படத்தில் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் சில உள்ளன...

வடிவேலுவின் தேர்ந்த நடிப்பு, உதயநிதி ஸ்டாலினின் அலட்டிக் கொள்ளாத கதாபாத்திரம், ஜாதி வெறியை வெளிக்காட்டும் பகத் பாசிலின் பிரமாதமான பெர்பார்மன்ஸ், மிக நேர்த்தியான ஏ.ஆர்.ரஹ்மானின் இசை... நிறைய இருக்கிறது படம் முழுக்க சிலாகிக்க.




காமெடியன், கோணங்கித்தனமாக பேசக் கூடியவர், ஜாலியாக ஆடக் கூடியவர், பாட்டுப் பாடக் கூடியவர், குணச்சித்திர ரோல்களில் வந்து போகக் கூடி��வர்.. என்ற அளவில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த வடிவேலுவை மிகப் பிரமாண்டமான Icon ஆக நம் முன்பு நிறுத்தி பிரமிக்க வைத்துள்ளார் மாரி செல்வராஜ். படம் முழுக்க வடிவேலுதான் நிறைந்து நிற்கிறார்.. பாத்திரத்திற்கேற்ப தனது பாடி லாங்குவேஜை கச்சிதமாக மாற்றுவதில் வடிவேலு கில்லாடி. அவரது ஒவ்வொரு படத்திலும் இதைப் பார்க்க முடியும். இந்தப் படத்தில் அடிமைத்தளையிலேயே உழன்று வாழ்ந்து வந்த ஒருவனது பாடி லாங்குவேஜ் எப்படி இருக்குமோ அதை அப்படியே கொண்டு வந்து காட்டியுள்ளார் வடிவேலு.

இது நம்ம வடிவேலுவா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அசத்தியிருக்கிறார்.. ஒரு விழாவில் மாரி செல்வராஜ் சொல்லியிருப்பார்.. "மாமன்னன் எனது அப்பா.. அவரை அப்படியே கண் முன்பு கொண்டு நிறுத்தியிருக்கிறார் வடிவேலு சார்" என்று.. அது உண்மைதான்..  கொஞ்சம் இருங்க வந்துர்றேன் என்று சொல்லி விட்டு மலை முகட்டுக்குப் போய் நின்று கொண்டு.. "இவர்களை மீறி என்ன செய்வது" என்ற கையாலாகாத நிலையை எண்ணி குமுறி அழும் அந்தக் காட்சியில் கலங்காதவர்களே இருக்க முடியாது.. நம்மில் பலரும் கூட இப்படிப்பட்ட நிலையை அனுபவித்திருப்போம்தானே.. ஜாதிய அடக்குமுறைகளின் கொடுமைகளை சந்தித்த ஒவ்வொருவருக்கும் இந்தக் காட்சி மனதை உலுக்கியிருக்கும்.

உச்சகட்ட கோபம் வர வேண்டிய நேரத்திலும் கூட பொறுமையும், நிதானமும் காப்பது.. சாதுரியத்தோடு செயல்படுவது.. அனைவரையும் மதிப்பது.. அதேசமயம், பொறுக்க முடியாத சமயத்தில் நானும் ஆயுதத்தைத் தூக்க முடியும்.. என்று கொஞ்சம் நிமிர்ந்து நிற்பது.. வெற்றி கை அருகே வந்து நின்று களியாட்டம் போடும்போதும் கூட தலை கால் தெரியாமல் ஆடாமல் அமைதி காப்பது.. தன்னை அழிக்கத் துடிக்கிறான் என்று தெரிந்தும் கூட புன்னகையுடன் பேசுவது.. என படம் முழுக்க "மாமன்னன்"வடிவேலு  கொடி கட்டிப் பறந்திருக்கிறார்.




இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பம்சம்.. மாமன்னனின் மகன் ஒவ்வொரு முறையும் கோபப்படும்போதும் அதை ஆவேசத்துடன் வெளிப்படுத்துகிறான். அடி வாங்குவதை விட அவன் அடிப்பதே அதிகம் இருக்கும்.. "போன தலைமுறையை அடக்கி வச்சே.. இந்தத் தலைமுறை அப்படி இல்லை..  திருப்பி அடிக்கும்" என்ற மெசேஜ் அதில் தெரிகிறது.

கொடூரமான வலியை.. வடுவாக மாறிப் போய் விட்ட வேதனையை.. எளிய கதைக்களமாக்கி.. அதை அழகாக கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ். ரத்த வெறி பிடித்த காட்சிகள் கிடையாது.. வெறியூட்டும் வசனங்கள் கிடையாது.. மாறாக சிந்திக்க வைத்துள்ளது படத்தின் கதைப் போக்கும், அதன் கதாபாத்திரங்களும்.. "சிந்திங்கடா.. இன்னுமாடா இப்படி இருக்கீங்க.. எவ்வளவு காலம் இப்படியே இருப்பீங்க" என்று ஆதிக்க வெறி பிடித்த ஒவ்வொருவரின் தலையிலும் கொட்டு வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.. மாமன்னன்!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்