சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் விருப்ப மனு கொடுத்திருந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவேரா. இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் திருமகன் மறைந்தார். இதையடுத்து அத்தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத் தேர்தல் என சமீபத்தில் தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என திமுக தலைமை அறிவித்தது. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் மேலிடம் இறங்கியது. சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் வருகை தந்து, கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பின்போது ஈவிகேஎஸ் இளங்கோவன், அவரது மகன் சஞ்சய் சம்பத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தினேஷ் குண்டுராவ், சஞ்சய் சம்பத்துடனும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் சம்பத் பேசுகையில், ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன். கட்சி மேலிடம் முடிவை அறிவிக்கும் என்று தெரிவித்தார்.
சஞ்சய் சம்பத்தே வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டு வந்தது. காங்கிரஸ் வேட்பாளர் குறித்த அறிவிப்பை தினேஷ் குண்டுராவ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஏற்கனவே காங்கிரஸ் வெற்றிக்காக திமுகவினர் பிரசாரத்தில் குதித்து விட்டனர். தமிழ்நாடு அமைச்சர்கள் சு. முத்துச்சாமி, கே.என். நேரு உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று பிரசாரத்தை தொடங்கி வைத்துள்ளனர்.
{{comments.comment}}