டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை சுட்டுத் தள்ளவும் போலீஸாருக்கு உரிமை உள்ளது. தேவைப்பட்டால் சுடலாம் என்று கூறி டிவீட் போட்ட முன்னாள் கேரள டிஜிபியும், இந்துத்வா ஆதரவாளருமான என்.சி.அஸ்தானாவுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா சவால் விடுத்துள்ளார்.
கேரள மாநில டிஜிபியாக இருந்தவர் அஸ்தானா. ஓய்வு பெற்று விட்டார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்துத்வா ஆதரவு கருத்துக்களை அதிகம் தொடர்ந்து வெளியிட்டு வருபவர். டெல்லியில் நடந்து வந்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளின் போராட்டத்தை கடுமையாக விமர்சித்து வந்தவர்.
அவர்களை அசிங்கம், குப்பை என்றுதான் தனது டிவீட்டுகளில் தொடர்ந்து சாடி வந்தரா். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் பெற்றவர்களை இப்படி அவர் கொடூரமாக விமர்சித்தது சர்ச்சையாகவும் மாறியது. ஆனால் எதையும் அவர் கண்டுகொள்வதில்லை.
இந்த நிலையில் நேற்று ஜந்தர்மந்தர் பகுதியிலிருந்து புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட மல்யுத்த வீராங்கனைகளை போலீஸார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இது நாடு முழுவதும் பேசு பொருளானது, பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸாரின் செயலால் ஆவேசமடைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, எங்களை சுடுங்கள் என்று ஆவேசமாக கூறினார்.
இதுகுறித்த�� அஸ்தானா வெளியிட்ட டிவீட்டில், தேவைன்னா சுடுவோம். நீங்க சொல்வதற்காக சுட முடியாது. இப்போது உங்களை குப்பை போல தூக்கி வீசி விட்டார்கள். போலீஸாருக்கு சட்டப்படி சுடுவதற்கு அதிகாரம் உள்ளது. சூழ்நிலை ஏற்பட்டால் அதையும் செய்வோம். அடுத்த முறை உங்களை பிரேதப் பரிசோதனை அறையில் சந்திக்கிறேன் என்று கொடூரமாக கூறியிருந்தார் அஸ்தானா.
இந்த டிவீட்டுக்கு பஜ்ரங் பூனியா பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், இந்த ஐபிஎஸ் அதிகாரி எங்களை சுடுவோம் என்று சொல்கிறார். நான் ஒரு சகோதரனாக முன்னால் வந்து நிற்கிறேன். சொல்லுங்கள். எங்க வர வேண்டும். சுடுங்கள் பார்க்கலாம். முதுகைக் காட்டிக் கொண்டு ஓட மாட்டேன். நெஞ்சை நிமிர்த்தி நிற்பேன். உங்களது தோட்டாக்களை தாங்கி நிற்பேன். அது மட்டும்தானே மிச்சம் உள்ளது என்று வேதனையுடனும், வீரத்துடனும் கூறியுள்ளார் பஜ்ரங் பூனியா.
{{comments.comment}}