சென்னை : 2026 ல் தமிழகத்தில் பாஜக.,வின் ஆட்சி மலரும் என பாஜக.,வின் மாஸ்டர் பிளானை பகிரங்கமாக தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதனால் தமிழக அரசியல் புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
பாஜக., மேலிடத்தின் கட்டுப்பாட்டில் தான் அதிமுக இயங்கி வருவதாகவும், அதிமுக கட்சிக்குள் முக்கிய முடிவுகளை கூட பாஜக தான் எடுப்பதாக கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் ஒரு பேச்சு நிலவி வருகிறது. இது உண்மை தான் என்பது போல் அதிமுக.,வும் பாஜக.,வை எதிர்க்காமல், தொடர்ந்து கூட்டணியை தொடர்ந்து வருகிறது.
அதிமுக.,வை பயன்படுத்தி, தமிழகத்திலும் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிடுவதாக கூட குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் பாஜக.,வின் 44 வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தின் சுவரின் தாமரை சின்னத்தை வரைந்து கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருங்காலத்தில் தமிழகத்திலும் பாஜக ஆட்சி மலரும். பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர்களின் எண்ணங்களை செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். பாஜக, தமிழகத்தில் தன்னை பலப்படுத்தி வருகிறது. 2026 ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதே எங்களின் நோக்கம் என்றார்.
சமீபத்தில் தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, 2024 ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடக்கும். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார். பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என்று வேறு இரு கட்சிகளும் சொல்லி கொண்டுள்ளன. தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகள் என்றால் அது அதிமுக - திமுக தான். இந்த இரு கட்சிகளும் தான் தமிழகத்தை பல ஆண்டுகளாக மாறி மாறி ஆண்டு வருகின்றன.
இந்நிலையில் 2026 ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என அண்ணாமலை கூறுவதால் அதிமுக.,வின் நிலை என்ன என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. அதிமுக.,வை பகடைக் காயாக பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே அண்ணாமலை பற்றி பல சலசலப்புக்கள் தமிழக அரசியலில் போய் கொண்டிருக்கையில், தற்போது அண்ணாமலை பேசி உள்ள கருத்து அதிமுக.,வை மட்டுமல்ல திமுக.,வையும் சேர்த்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
தான் தாமரை சின்னத்தை வரைந்தது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள அண்ணாமலை, நான் செஞ்சுட்டேன்.. நீங்க என்று தொண்டர்களிடம் கேட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் சுவர் ஓவியங்களாக தாமரைச் சின்னத்தை வரைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
{{comments.comment}}