சென்னை : சிபிஐ.,க்கு வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. இதன்படி மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் முன் அனுமதியை பெற்று விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என சமீபத்தில் அறிவிப்பாணை வெளியானது. இதனை விமர்சித்து தமிழ்நாடு பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை, பட்டியலுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட பட்டியல்:
* 2014ம் ஆண்டு ஜூலையில் சென்னை முகலிவாக்கம் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததற்கு சிபிஐ விசாரணை கோரினீர்கள்.
* பிப்ரவரி 2015ல், விவி மினரல்ஸ் நிறுவனத்தின் மேல் சிபிஐ விசாரணை கேட்டீர்கள்.
* மே 2016ல், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்களில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றீர்கள். அரவக்குறிச்சியில் இதே செந்தில் பாலாஜி அவர்களின் மீதுதான் குற்றச்சாட்டும் வைத்தீர்கள்.
* டிசம்பர் 2017, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது சிபிஐ விசாரணை கோரினீர்கள்.
* 2018 ஏப்ரலில் குட்கா விற்பனையில் சிபிஐ விசாரணை
* 2018 மே – குரூப் 1 தேர்வு முறைகேடுகளில் சிபிஐ விசாரணை கோரிக்கை.
* 2018 ஜூலை – அன்றைய அமைச்சர்கள் மேல் சிபிஐ விசாரணை கோரிக்கை, கனிம மணல் சுரங்கம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிக்கை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை கோரிக்கை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிக்கை.
* 2018 செப்டம்பர் – ஸ்மார்ட் சிட்டி திட்ட ஏலம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிக்கை
* மார்ச் 2019 – பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிக்கை
* ஜூன் 2019 – அதிமுக எம்எல்ஏ.,க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ விசாரணை கோரிக்கை
* செப்டம்பர் 2019 – ஆர்கே நகர் தேர்தல் முறைகேடுகள் குறித்த விசாரணையை சிபிஐ.,க்கு மாற்றக் கோரிக்கை
* அக்டோபர் 2019 – நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை
* ஜூன் 2020 – தூத்துக்குடி லாக்கப் மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கேட்போம் என்ற அறிவிப்பு
* செப்டம்பர் 2020 – பிரதமரின், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரிக்கை.
மேலும் அவர் கூறியிருப்பதாவது: சிபிஐ விசாரணைக்கு முன் மாநில அரசின் அனுமதி வேண்டும் என்று அவசர அவசரமாக முடிவெடுத்துள்ளீர்கள். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கடந்த பல ஆண்டுகளில், அதாவது மத்தியில் பா.ஜ., ஆட்சியில் உள்ளபோதே எத்தனை முறை சிபிஐ விசாரணை கோரியுள்ளீர்கள் என்பது நினைவு இருக்கிறதா? இப்போது ஆளும்கட்சியாக ஆன பின்பு சிபிஐ உங்கள் அனுமதி பெற்றுத்தான் உள்ளே வரவேண்டும் என்று சொல்வது நீங்கள் நடத்தி வரும் ஆட்சியின் அவலங்களின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
அது மட்டுமல்ல, உங்கள் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த போது, உங்களுக்கான தனிப்பட்ட தமிழக போலீசின் பாதுகாப்பை நம்பாமல், மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்பைக் கேட்ட வரலாறுகளும் உண்டு. மற்றவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் சிபிஐ விசாரணை கோரும்போது, நீங்கள் செய்த தவறுக்கு நாங்கள் சிபிஐ விசாரணை கோருவதில் என்ன குற்றம் கண்டீர்கள்? எதற்காக இப்படி பதறிப் பாய்கிறீர்கள் முதல்வர் அவர்களே?. இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
{{comments.comment}}