மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் இன்று பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவில் ஏப்ரல் 23 ம் தேதியும், அழகர்மலை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் மே 01 ம் தேதியும் கொடியேற்றத்துடன் துவங்கியது. மீனாட்சி அம்மன் கோவில் வைபவங்கள் மே 03 ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து அழகர்மலையில் இருந்து புறப்பட்டு வந்த கள்ளழகருக்கு நேற்று மதுரை மூன்று மாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெற்றது. வீர ராகவ பெருமாள், கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு முழுவதும் தல்லாகுளம் ப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தங்கி இருந்து சேவை சாதித்த கள்ளழகருக்கு சித்ரா பெளர்ணமி நாளான இன்று (மே 05) காலை, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அழகர்மலையில் இருந்து தலைசுமையாக மதுரைக்கு கொண்டு வரப்பட்ட நூபுர கங்கை தீர்த்த தண்ணீரால் கள்ளழகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, தங்க குதிரையில் ஏறி வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
காலை 05.45 மணி முதல் 06.30 மணிக்குள் பச்சை பட்டுடுத்தி, பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். வைகை ஆற்றில் கூடி இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா...கோவிந்தா" முழக்கம் விண்ணை பிளக்க, சித்திரை திருவிழா உச்சகட்ட களைகட்ட, பக்தர்கள் வெள்ளத்திற்கு இடையே, வைகையில் பெருகி வந்த தண்ணீரில் ஆடி அசைந்து கள்ளழகர் வந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து கள்ளழகர், தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அங்கு மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அதைத் தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியிலும் கள்ளழகர் எழுந்தருள் நிகழ்வும் நடைபெற உள்ளது.
{{comments.comment}}