சென்னை: பாலியல் புகாருக்குள்ளான பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்தவர் பிரிஜ் பூஷன்சரண் சிங். இவர் நீண்ட காலமாக எம்.பியாக இருக்கிறார். முன்பு சமாஜ்வாடியில் இருந்த இவர் தற்போது பாஜகவில் இருக்கிறார். இவரது ஆரம்ப காலமே அடிதடியாகத்தான் இருந்திருக்கிறது. இவர் மீது ஆரம்ப காலத்தில் திருட்டு வழக்குகள் எல்லாம் இருந்தனவாம். பின்னர் அரசியலுக்குள் புகுந்து ஜாதி பலத்தால் அசைக்க முடியாத தலைவராக மாறியிருக்கிறார்.
ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவரான இவரது வாக்கு வங்கியை மனதில் வைத்து இவர் மீது நடவடிக்கை எடுக்க எல்லோருமே பயப்படுவதாக சொல்கிறார்கள். இவர்தான் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் இருக்கிறார். இவர் மீதுதான பாலியல் புகார்களைச் சுமத்தி நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகளும், வீரர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டுக்காக ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட உயரிய போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் தெருக்களில் நின்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுவரை பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது ஒரு கீறல் கூட விழவில்லை.
சமீபத்தில் புதிய நாடாளுமன்றத் திறப்பின்போது நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை டெல்லி போலீஸார் கையாண்ட விதம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நாட்டுக்காக பதக்கம் வென்றவர்களுக்கே இந்த நிலையா என்று பலரும் கேள்வி எழுப்பினர். நாடு முழுவதும் இது பெரும் ��ாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், செங்கோல் வைக்கப்பட்ட முதல் நாளே அது வளைந்து விட்டது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 2 டிவீட் போட்டுள்ளார். லாவண்யா என்பவரின் டிவீட்டை ரீடிவீட் செய்து ஒரு டிவீட் போட்டுள்ளார்.. அதில். இது இதயத்தை நொறுங்க வைப்பதாக உள்ளது. பிரதமர் நரேந்தி மோடி அவர்களே, உங்களது அரசு செய்வது நிச்சயம் தவறானது. பெண்களுக்கு, நமது வெற்றியாளர்களுக்கு, நமது பெருமைக்கு, உண்மைக்கு தவறு இழைக்கிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி சரியானதைச் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
இன்னொரு டிவீட்டில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே பிரிஜ்பூஷன் சரண் சிங் புன்னகையுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தைப் போட்டு அதற்கு கமெண்ட் கொடுத்துள்ளார். அதில், இன்று நான் பார்த்த மிகவும் அசிங்கமான புகைப்படம். இந்தியா மீதான எனது நம்பிக்கையை இது தகர்ப்பதாக உள்ளது. நமது நாட்டில் பெண்கள், குழந்தைகளின் நிலை குறித்த கேள்வியை எழுப்புகிறது. தேசிய அவமானம் என்று கூறியுள்ளார் கஸ்தூரி.
கஸ்தூரியின் இந்த டிவீட்டுகளுக்கு கமண்ட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. அதில் ஒருவர், அந்த நபர் எந்தக் கட்சி என்ற விவரத்தையும் சேர்த்துப் போட்டிருக்கலாமே. அப்பதானே மக்களுக்கு உண்மை தெரியும் என்று கிண்டலடித்துள்ளார்.
{{comments.comment}}