மதுரை: மதுரையில், ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆன்மீக சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
லக்னோவிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆன்மீக சுற்றுலா ரயில் இது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் இதில் பயணித்து வந்தனர். இந்த ரயில் மதுரை ரயில் நிலையம் அருகே ஒரு கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
இதையடுத்து அந்த ரயில் பெட்டி முழுமையாக தீப்பிடித்து எரிந்தது. கொளுந்து விட்டு எரிந்த தீயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளே சிக்கிக் கொண்டவர்கள் அலறித் துடித்தனர். போலீஸாரும், தீயணைப்புப் படையினரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்தனர். தீயை அணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.
ரயிலுக்குள் சமையல் செய்ததால் விபரீதம்
இந்த பெரும் தீவிபத்து சம்பவத்தில் சிக்கி 10 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் சிலிண்டரைப் பயன்படுத்தி சமையல் செய்துள்ளனர். சட்டவிரோதமாக ரயில் பெட்டிக்குள் சிலிண்டரை கொண்டு வந்து வைத்து சமையல் செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் சமையல் செய்வதை யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக ரயில் பெட்டியின் இரு பக்க கதவுகளையும் மூடிக் கொண்டு சமைத்துள்ளனர். இதனால்தான் யாராலும் தப்பிவெளியே வர முடியாமல் போயுள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல்
மதுரை ரயில் தீவிபத்து தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், மதுரை அருகே ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானதை அறிந்து வேதனை அடைந்தேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
{{comments.comment}}