தோஹா: இஸ்ரேல் நாட்டுக்காக உளவு பார்த்ததாக கூறி கைது செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த 8 முன்னாள் கடற்படையினருக்கு கத்தார் கோர்ட் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கத்தார் கோர்ட்டின் இந்த தீர்ப்பு குறித்து இந்தியா அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் என்று இந்தியாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனைக்குள்ளாகியுள்ள எட்டு இந்தியர்களும் கடற்படையில் பல்வேறு பதவிகளை வகித்தவர்கள். இந்திய போர்க்கப்பல்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். அனைவரும் தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலை பார்த்தனர். இது கத்தார் நாட்டுப் படையினருக்கு பயிற்சி உள்ளிட்டவற்றை தரும் அமைப்பாகும்.
இந்த நிறுவனத்தில் பெரும்பாலும் இந்தியர்களே அதிகம் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட எட்டு பேரும், கத்தார் நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் குறித்த முக்கியத் தகவல்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்ததாக கூறி அவர்களை கத்தார் போலீஸார் கைது செய்தனர். மேலும் தாஹ்ரா நிறுவனமும் உடனடியாக மூடப்பட்டது. அங்கு பணியாற்றிய அனைவரும் தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டனர்.
பல மாதங்களாக விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று கத்தார் கோர்ட் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. எட்டு இந்தியர்களும் ஜாமீன் கோரி பலமுறை கோர்ட்டில் விண்ணப்பித்தும் கூட அவை நிராகரிக்கப்பட்டன. இந்த தீர்ப்பு குறித்து இந்தியா கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தீர்ப்பு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பு குறித்த முழுவிவரம் அறிய காத்திருக்கிறோம். எட்டு பேரின் குடும்ப உறுப்பினர்கள், வக்கீல்களுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. அனைத்து விதமான சட்ட தீர்வுகள் குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
இந்த வழக்கை நாங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக் கொண்டுள்ளோம். இதை கூர்ந்து கண்காணித்து வருகிறோம். எட்டு இந்தியர்களுக்கும் தேவையான தூதரக உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. சட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
{{comments.comment}}