சில்வர் ஜூப்ளி காணும்.. "துள்ளாத மனமும் துள்ளும்".. அதுல முதல்ல  நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

Jan 19, 2024,04:55 PM IST
சென்னை: இயக்குனர் எழில் திரைப்பயணத்தில் 25 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார். இவர் இயக்கத்தில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படமும் வெளியாகி ஜனவரி 29ம் தேதியுடன் 25 வருடங்களை தொட உள்ளது. 

இந்த 25 வருட கொண்டாட்டத்தை வரும் ஜனவரி 29ஆம் தேதி வடபழனி கிரீன்பார்க்  ஹோட்டலில் விழாவாக நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகும், தேசிங்கு ராஜா 2 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

1999 ஆம் ஆண்டு இயக்குனர் எழில் இயக்கத்தில் விஜய் நடித்த  திரைப்படம்தான் துள்ளாத மனமும் துள்ளும். இப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் எழில். இதில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், வையாபுரி, தாமு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த படமாக உருவாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது. 



இப்படத்தில் விஜயின் எதார்த்த நடிப்புக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. 90களில் வெளிவந்த பிரபலமான படங்களில் இதுவும் ஒன்றாக பேசப்பட்டது. இப்படத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு பெண் ரசிகர்கள் ஏராளமாக கிடைத்தனர் என்றே சொல்லலாம். இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. எஸ். ஏ  ராஜ்குமார் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் திரைக்கு வந்து வரும் ஜனவரி 29 ஆம் தேதி உடன் 25வது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது. இயக்குனர் எழிலும் திரை துறைக்கு வந்து 25 வருடமாகிறது. இயக்குனர் எழில், விமல் நடித்த தேசிங்கு ராஜா படத்தின் வெற்றிக்குப் பிறகு, பத்து வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் தேசிங்கு ராஜா 2 படத்தையும் இயக்கிக் வருகிறார். 

இதனைத் தொடர்ந்து இயக்குனர் எழிலின் 25 வருட திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் 25 வது வருட கொண்டாட்டத்தையும், தேசிங்குராஜா 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டையும் ஜனவரி 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு வடபழனி கிரீன்பார்க் ஹோட்டலில் பிரம்மாண்ட விழாவாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை தயாரிப்பாளர் இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் பி ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார்.



இதுகுறித்து இயக்குநர் எஸ். எழில் கூறுகையில், வரும் ஜன-29யுடன் துள்ளாத மனம் துள்ளும் படம் மட்டுமட்டுமல்ல, நானும் திரையுலகில் நுழைந்து 25 வருடம் ஆகிறது. அன்றைய தினம் இந்த கொண்டாட்டத்துடன் தேசிங்குராஜா2 பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட இருக்கிறோம். அந்த நிகழ்வில் இதுவரை நான் பணியாற்றிய படங்களின் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் என்னுடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள் அனைவரையும் அழைக்க இருக்கின்றோம்.

இன்னும் வெளியாகாமல் இருக்கும் எனது இரண்டு படங்களையும் சேர்த்து தேசிங்குராஜா2 எனது 15வது படம். வேறு மொழிக்கு செல்லும் எண்ணம் இதுவரை இல்லை. ஆரம்பத்தில் தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது.. அது ஒர்க் அவுட் ஆகவில்லை. 

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் கிளைமாக்ஸ் எப்போதுமே எனக்கு ஆச்சரியம் தருகிறது. பல திரையரங்குகளில் இந்த கிளைமாக்ஸ் காட்சிக்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். எனது இரண்டாவது படமான பெண்ணின் மனதை தொட்டு படத்தின் கதை விவாதத்திற்காக ஏற்காடு சென்றிருந்தபோது சேலத்தில் துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் 85 வது நாள் காட்சியை பார்க்க சென்றிருந்தோம். அப்போதும் கூட ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்ததை அதிர்ச்சியாக பார்த்தேன்.

சார்லி சாப்ளின் நடித்த சிட்டி லைட்ஸ் படத்திலிருந்து தான் எனக்கு துள்ளாத மனமும் துள்ளும் படத்தை உருவாக்குவதற்கான ஒரு பொறி கிடைத்தது. முதலில் வடிவேலுவை வைத்து கமர்சியல் அம்சங்கள் இல்லாமல் உருவாக்கத்தான் திட்டமிட்டு இருந்தோம். அந்த கதை கேட்டு வடிவேலு ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு இரண்டு மூன்று தயாரிப்பாளர்களிடம் கூட என்னை அனுப்பினார். ஆனால் எதுவும் கைகூடவில்லை. அதன் பிறகு விஜய் நடித்து ஹிட்டானது சந்தோஷம்.



தீபாவளி படத்திற்குப் பிறகு எனக்கு ஒரு இடைவெளி விழுந்தது. அதன்பிறகு வந்தபோது சினிமாவே மாறி இருந்தது. குறிப்பாக 2004க்கு பிறகு சினிமா டிஜிட்டலுக்கு மாறியது. பல புதிய இயக்குனர்களின் வருகை அதிகரித்தது. ஜெயம் ரவியே எனது படத்திற்கு சம்மதம் தெரிவித்த சமயத்தில் அவர் மூன்று படங்களில் நடிக்கும் அளவிற்கு பிஸியாக இருந்தார். ஆனால் நல்ல படங்கள் வந்தால் ஜனங்கள் அதை கொண்டாட தயாராக இருந்தார்கள்.

அந்த சமயத்தில் மனம் கொத்தி பறவை படத்தை காமெடியாக உருவாக்கியிருந்தேன். அந்த படம் எல்லோருக்கும் பிடித்து விட அதை தொடர்ந்து அனைவருமே காமெடி படங்களை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படி உருவானது தான் தேசிங்குராஜா. ஒரு கதையை உருவாக்க எப்போதும் ஆறு மாதம் நேரம் எடுத்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் யாரையும் நான் தேடி போவதில்லை. அந்த மாதிரி தான் சிவகார்த்திகேயனையும் நான் மீண்டும் தேடி செல்லவில்லை. காரணம் இந்த ஹீரோவுக்குத் தான் என நினைத்து கதை எழுதுவது இல்லை. எழுதி முடித்தபின் அதற்கு யார் பொருத்தமோ அந்த ஹீரோவை தான்  தேடி போகிறேன். 

தேசிங்குராஜா படத்திற்கும் இந்த இரண்டாம் பாகத்திற்கும் ஓரளவு கதையில் சில சாயல்கள் ஒன்றாக இருந்தாலும் இதன் திரைக்கதை முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். முதல் பாகத்தில் நடித்த சூரி இப்போது ஹீரோவாகி விட்டதால் அவரை அழைப்பது சாத்தியப்படாது.  இந்த படத்தில் ஜனா, புகழ், ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் என பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கின்றது. கதாநாயகிகளாக, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா நடிக்கிறார்கள். 



அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்” படத்திற்கு பிறகு இசை அமைப்பாளர் வித்யாசாகருடன் இதில் இணைகிறேன். பல சாதனைகளை கடந்தவர். படபிடிப்பு நடந்து வருகிறது. சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. 

சினிமாவில் இப்போது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. அதற்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள வேண்டும். அதே சமயம் சிறிய பட்ஜெட் படங்களில் பெரிய மாற்றங்களை செய்ய முடியாது. பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டுமே அது சாத்தியம். சமீபத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, “என்ன ஆச்சு உங்களுக்கு ? எதற்காக இப்படி ட்ரெண்ட் மாறி வித்தியாசமாக பாடல்களை கேட்டு வாங்கிகொள்கிறீகள் ..” என கேட்டார். 

வித்தியாசமான பாடல்கள் எனது படங்களில் இருந்தாலும், என்னை பொருத்த வரை மெலோடி பாடல்களை எப்போது கொடுத்தாலும்  ரசிகர்கள் கேட்கத் தயாராக தான் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் வருவதை விட சுயாதீன இசையமைப்பாளர்கள் தான் மெலடி பாடல்களை அதிகம் கொடுக்கிறார்கள். அதை இன்றைய இளைஞர்கள் ரசித்து கேட்கிறார்கள்.

எனது இயக்கத்தில் விஷ்ணு விஷாலின் ‘ஜகஜால கில்லாடி’, ஜிவி பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என இரண்டு படங்களும் அடுத்தடுத்து வரும் என இயக்குனர் எழில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்