பெங்களூரு: 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரை அமெரிக்காவிலிருந்து இடம் மாற்ற ஐசிசி தீர்மானித்திருப்பதாக செய்திகள் வரும் நிலையில், தங்களால் இந்தத் தொடரை சிறப்பாக நடத்த முடியும் என்று அமெரிக்க கிரிக்கெட் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.
கிரிக்கெட் பிரபலம் ஆகாத நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கிரிக்கெட் ஆடாத நாடுகளிலும் அதை பிரபலப்படுத்த ஐசிசி தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவிலும் அது கிரிக்கெட்டை வளர்க்க தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டியை அமெரிக்காவில் நடத்த ஐசிசி திட்டமிட்டிருந்தது. அமெரிக்காவுடன், இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் இணைந்து இத்தொடரை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
ஆனால் தற்போது அமெரிக்காவில் நடத்தத் திட்டமிட்டுள்ள போட்டிகளை மட்டும் இடம் மாற்ற ஐசிசி யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் கிரிக்கெட் கட்டமைப்புகள் சரியாக இல்லாததால், போட்டியை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று ஐசிசி கருதுகிறது.
இதுகுறித்து அமெரிக்க கிரிக்கெட் கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது. அந்தக் கவுன்சிலைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை ஐசிசியிடமிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. நாங்கள் இதுகுறித்துக் கேள்விப்படவும் இல்லை. நாங்கள் யாருடனும் இதுகுறித்துப் பேசவும் இல்லை. டி20 தொடருக்கான ஏற்பாடுகளில் தொடர்ந்து தீவிரமாக உள்ளோம்.
அமெரிக்கா தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில்லை என்பதால் மைதானங்கள் குறித்த கவலை வருவது இயற்கையானதே. ஆனால் டெக்சாஸில் நாங்கள் ஆறு அணிகளுடன் ஒரு கிரிக்கெட் தொடரை திட்டமிட்டுள்ளோம். ஜூலை 13 முதல் 30ம் தேதி வரை அது நடைபெறும். இந்தப் போட்டித் தொடரைப் பார்த்த பிறகு, எங்களால் டி20 உலகக் கோப்பைத் தொடரை சிறப்பாக நடத்த முடியும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளலாம் என்றார்.
இதற்கிடையே, அமெரிக்காவிலிருந்து போட்டித் தொடரை மாற்றப் போவதாக வெளியாகும் செய்திகளுக்கு ஐசிசி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று ஐசிசி போர்டு உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். திட்டமிடபடி போட்டிகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மறுபக்கம், இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஒரு போட்டியை அமெரிக்காவில் நடத்தவும் ஐசிசி திட்டமிட்டுள்ளது. இந்த இரு அணிகளும் மோதும் போட்டிகளுக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் வரும், எதிர்பார்ப்பு பலமாக இருக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பதால் இதை வைத்து உலகக் கோப்பைத் தொடருக்கு விளம்பரம் தேடவும் ஐசிசி திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
{{comments.comment}}