ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கிறேன்.. யுவன் ஷங்கர் ராஜா
சென்னை: மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அசவுகரியம் வருத்தம் தருகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மிகவும் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். சக இசையமைப்பாளர் என்ற வகையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தினார். சில மாதங்களுக்கு முன்பே இது நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அப்போது மழையால் பாதிக்கப்பட்டு தள்ளிப்போடப்பட்டு சமீபத்தில் நடைபெற்றது.
ஆனால் இந்த முறை வேறு மாதிரியான பிரச்சினை ஏற்பட்டு விட்டது. டிக்கெட்கள் அதிக அளவில் விற்கப்பட்டதால் கூட்ட நெரிசல் மிகக் கடுமையாக இருந்தது. வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்படவில்லை. டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே கூட போக முடியாத அளவுக்கு கோமாளித்தனமான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தனர். இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பாதிக்கப்பட்டனர்.
குடும்பம் குடும்பமாக வந்திருந்த ரசிகர்கள்தான் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். பெண்கள், குழந்தைகளும் பல்வேறு வகையான பாதிப்புகளை சந்திக்க நேரிட்டது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிதாக வெடித்தது. அதேசமயம், இந்த விவகாரத்தில் "சிலர்" உள்ளே புகுந்து மத ரீதியாக, ரஹ்மானை தனிப்பட்ட முறையில் திட்டத் தொடங்கினர். இதனால் விவகாரம் வேறு மாதிரியாக திசை திரும்பி விட்டது.
இந்த பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கருத்து தெரிவித்துள்ளார். ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று அவர் அறிக்கை விட்டுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதன் சாராம்சம்:
ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்துவது என்பது சாதாரணமானதல்ல. ஆட்களை நிர்வகிப்பது, பொருட்களை நிர்வகிப்பது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது என்று பல்வேறு அம்சங்கள் இதில் அடக்கம். கூட்டம் அதிகமாகும், எதிர்பாராத வகையில் கூட்டம் கூடும்போது பிரச்சினைகளும் பெரிதாகவே இருக்கும். நிர்வாக ரீதியில் இதில் நாம் மிகவும் கவனமாக இருந்தாக வேண்டும். அதுபோன்ற குழப்பங்கள் ஏற்படும் போது நாம் என்னதான் உயர்வாக இருந்தாலும் கூட அது தவறாகவே பார்க்கப்படும். நமது இசையை அர்த்தப்பூர்வமாக்கும் ரசிகர்களை அது நிச்சயம் பாதிக்கும்.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அவர்களை முழுமையாக நம்பித்தான் நாங்கள் அவர்களிடம் பொறுப்பை கொடுக்கிறோம். ஷோ சிறப்பாக நடக்க வேண்டும். அனைவரும் அதை அனுபவித்து ரசிக்க வேண்டும், ரசிகர்கள் திருப்திகரமாக நிகழ்ச்சியை பார்த்துச் செல்ல வேண்டும் என்பதே எங்களது மிக முக்கிய கவனமாக இருக்கும். இதையெல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியாக செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் ஷோக்களை நடத்துகிறோம். ஆனால் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்து விடும்போது கலைஞர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
ஒரு சக இசையமைப்பாளராக நான் ஏ.ஆர். ரஹ்மானுடன் நிற்கிறேன். ரசிகர்களுக்கு பல்வேறு நல்ல காரணங்களுக்காக மறக்க முடியாத இரவைக் கொடுக்க நிகழ்ச்சி, வேறு தவறான காரணங்களுக்காக மறக்க முடியாததாக மாறிப் போனது துரதிர்ஷ்டவசமானது.
தவறுகளிலிருந்து பாடம் கற்றிருப்போம் என்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்பு மற்றும் ரசிகர்களின் வசதி ஆகியவற்றை மனதில் கொண்டு குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியோர்களின் நலன் குறித்து அக்கறை காட்டி ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்று நம்புவோம் என்று கூறயுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.