டெல்லி சட்டம், நம்பிக்கை இல்லா தீர்மானம் .. மோடி அரசுக்கு ஜெகன் மோகன் ஆதரவு
Jul 27, 2023,01:37 PM IST
டெல்லி : பார்லிமென்ட்டில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தினால் அதில் மத்திய அரசுக்கு ஆதரவு தர தயாராக உள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதேபோல டெல்லி அவசரச் சட்டம் தொடர்பாகவும் மத்திய அரசுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
மணிப்பூர் கலவரம் தொடர்பான விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த சபாநாயகர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். விவாதத்திற்குப் பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும். இந்நிலையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான ஓட்டெடுப்பிலும் சரி, டில்லி அவசர சட்ட விவகாரத்திலும் சரி மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட உள்ளதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வி.விஜயசாய் ரெட்டி தெரிவித்துள்ளார்.
டில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் தான் முடிவெடுக்கும் நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும். துணைநிலை கவர்னர் அனைத்து அதிகாரத்தையும் தன்னிடமே வைத்திருப்பது சரியல்ல என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனால் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. டில்லியில் அரசு அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் துணைநிலை கவர்னர், டில்லி முதல்வர், தலைமை செயலாளர் ஆகியோர் அடங்கிய குழு தான் முடிவெடுக்கும் என தெரிவித்தது. இதனால் மறைமுகமாக மீண்டும் டில்லியின் ஆட்சி அதிகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த அவசர சட்டம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் தனக்கு ஆதரவு அளிக்கும் படி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கேட்டு வந்தார். நீண்ட இழுபறிக்கு பிறகு சமீபத்தில் பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.
பாஜக.,வை பொறுத்தவரை லோக்சபாவில் அக்கட்சிக்கு பலம் அதிகம். அதனால் இந்த அவசர சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பையும் மீறி லோக்சபாவில் நிறைவேற்றி விடுவார்கள். ஆனால் ராஜ்யசபாவில் ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றால் பாஜக கூட்டணிக்கு 123 ஓட்டுக்கள் தேவை. ஆனால் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 108 ஓட்டுக்கள் தான் பாஜக.,விடம் உள்ளது. இதனால் மத்திய அரசு கொண்டு வரும் சட்ட மசோதாக்கள் பல ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படாததால் நிலுவையில் உள்ளன.