டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து...இனி எல்லோருக்கும் இப்படி தான்
சென்னை : யூட்யூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 06.10.2023 முதல் 05.10.2033 வரை ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டிடிஎப் வாசன் சமீபத்தில் பெங்களூரு சாலையில் பைக்கில் செல்லும் போது வீலிங் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவர் தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி காயம் அடைந்தார். காயம் அடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி, பரபரப்பானது. இது குறித்து அறிந்த காவல் துறையினர் வாசனை கைது செய்தனர்.
இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனின் கை எலும்பு முறிந்து, பலத்த காயம் ஏற்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. முதல் நாள் அவர் ஸ்டிரெக்சரில் வைத்து அழைத்து செல்லப்பட்ட காட்சிகள் வெளியான நிலையில், அடுத்த நாளே சிறைக்கு அழைத்து செல்லும் போது இரு கைகளையும் வீசிக் கொண்டு, ஹாயாக அவர் நடந்து சென்ற காட்சிகளும் வெளியானது. இந்த முரண்பட்ட காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
டிடிஎப் வாசன் மீது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வாசன் 3 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். வாசனின் மனு மூன்று முறையும் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபமாக, நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய யூட்யூப்பர் வாசனின் பைக்கை எரித்து விட வேண்டும் என்றும், விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், யூ ட்யூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்துள்ளது. 06.10.2023 முதல் 05.10.2033 வரை ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை கேட்ட டிடிஎஃப் வாசனின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், பிறருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதம் வேகமாக வாகனம் ஓட்டும் அனைவரின் ஓட்டுநர் உரிமமும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் என்றும் போக்குவரத்து காவல் துறையினர் கூறியுள்ளனர்.