விக்கிரவாண்டியில் சர்ச்சை பேச்சு.. சாட்டை துரைமுருகனை தென்காசியில் கைது செய்த திருச்சி போலீஸ்!

Manjula Devi
Jul 11, 2024,01:26 PM IST

சென்னை:   விக்ரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மறைந்த முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக அரசை அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில், பிரபல youtuber மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.


திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்ததை நிலையில் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு நேற்று அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன், வாக்குகளை செலுத்தி தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். இதில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. மேலும் வரும் சனிக்கிழமை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொகுதியில் பதிவான வாக்குகள்  எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன.




இந்த நிலையில், பிரபல யூடியூபரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான சாட்டை துரைமுருகன் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. சாட்டை துரைமுருகன் தினமும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்  குறித்த அரசியல் கருத்துக்களை அவரது youtube பக்கத்தில் வெளியிட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி  சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து  பிரச்சாரத்தில் ஈடுபட்டார் சாட்டை துரைமுருகன். இந்த பிரச்சாரத்தின்போதுதான், கருணாநிதி மற்றும் தமிழ்நாடு அரசு பற்றி அவதூறாக பேசியதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில்  சாட்டை துரைமுருகன் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. 


இதையடுத்து தென்காசியில் விடுதியில் தங்கியிருந்த துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.