ஆபரேஷன் தியேட்டருக்குள் வீடியோ.. தொப்புள் கொடியை வெட்றீங்களா.. கேட்ட டாக்டர்.. கட் செய்த இர்பான்!

Meenakshi
Oct 21, 2024,05:57 PM IST

சென்னை: பிரபல யூடியூபரான இர்பான் ஆபரேசன் தியேட்டருக்குள் தனது வீடியோ டீமுடன் சென்று மனைவியின் பிரசவத்தைப் படம் பிடித்துள்ளார். அத்தோடு நில்லாமல் தொப்புள் கொடியையும் வெட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த வீடியோவையும் அவர் தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளதால் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பபட்டுள்ளது.

யூடியூபர் இர்பான் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் தெரிந்து கொண்டு, அதனை வீடியோவாகவும் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையானது. இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை பொதுவெளியில் அறிவித்தது தவறு என்றும் கூறப்பட்டது. இது தொடர்பாக இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றும் இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பின்னர் அந்த வீடியோ இணையதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. 



இர்பான் மருத்துவ குழுவிடம்  மன்னிப்பு கேட்டதால், அவர் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் இர்பான். இந்த முறையும் குழந்தை தொடர்பான சர்ச்சையில்தான் அவர் சிக்கியுள்ளார்.

இர்பான் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த பிரசவத்தின்போது ஆபரேஷன் அறைக்குள் இர்பானும் இருந்துள்ளார். கூடவே பிரசவத்தையும் அவர் வீடியோ எடுத்துள்ளார். குழந்தை பிறந்த பின்னர் அதை தூக்கி வைத்துக் கொண்டிருந்த பெண் டாக்டர், தொப்புள் கொடியை கட் பண்றீங்களா என்று திரும்பத் திரும்ப இர்பானிடம் கேட்கிறார். அவருக்கு கிளவுஸ் கொடுங்க என்றும் சொல்கிறார். இதையடுத்து நர்ஸ் ஒருவர் இர்பானிடம் கிளவுஸ் கொடுக்க, அவர் அதை கையில் மாட்டிக் கொண்டு கத்திரிக்கோலால் தொப்புள் கொடியை வெட்டுகிறார்.

இந்த வீடியோவை தனது யூடியூப் தளத்தில் போட்டுள்ளார் இர்பான். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தனது மனைவி வீட்டில் இருந்தது முதல் அவர் குழந்தை பெற்று எடுத்தது வரையிலான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இர்பானின் மனைவி பிரசவ வலியால் துடிக்கும் காட்சி குழந்தை பிறந்தவுடன் அதை கையில் ஏந்துவது, தொப்புள் கொடியை வெட்டுவது உள்ளிட்ட காட்சிகள் இருந்தன. 

இது தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின் படி தவறு என்றும், மேலும் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்றும், தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ சேவைகள் இயக்குநர் சொல்வது என்ன?

இதுகுறித்து  தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் ஜே.ராஜமூர்த்தி நியூஸ் 18 தமிழ்நாடு சானலுக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நானும் அந்த வீடியோவைப் பார்த்தேன். அனுமதி வாங்கியதாக சொல்கிறார்கள். அவர் தொப்புள் கொடியை கட் செய்யக் கூடாது. பயிற்சி பெற்ற மருத்துவர்கள், நர்ஸ்கள்தான் கட் செய்ய வேண்டும். முழுக்கை சட்டையும் அவர் போடலை. தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். அதற்கு முன்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவோம். விளக்கம் கேட்ட பிறகு நடவடிக்கை தொடரும்.

இதுபோல மீண்டும் செய்த காரணத்தால், ஏற்கனவே செய்த அந்தத் தவறை (குழந்தையின் பாலினத்தை வெளியில் சொன்ன விவகாரம்) மீண்டும் எடுத்து சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளம். இவர் இப்படி தொடர்ச்சியாக சர்ச்சையை ஏற்படுத்துவது எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மேல்கட்ட விசாரணை நடைபெறும்.

இந்த விவகாரத்தில் 3 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். அந்த மருத்துவர். அவரது பெயர் டாக்டர் நிவேதிதா என்று தெரிகிறது. அவர் மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் தருவோம். அவர்கள்தான் நடவடிக்கை எடுப்பார்கள். 2வது அந்த மருத்துவமனை. அவர்கள் தங்களது விளம்பரத்திற்காக இதைச் செய்திருக்கலாம் என்பதால் மருத்துவமனையின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்ய முடியும். வீடியோ கேமராமேன், இர்பான் என்று எத்தனை பேர் ஆபரேஷன் தியேட்டரில் இருந்தனர் என்று தெரியவில்லை. இர்பான் மீது போலீஸில் புகார் கொடுக்க முடியும். குறைந்தபட்சம் அவர் வீடியோவை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்