கட்டற்ற சுதந்திரம்.. வாய்க்கு வந்ததைப் பேசலாம்.. ஆபாச குப்பைகளாக மாறும் யூடியூப் சானல்கள்!

Su.tha Arivalagan
May 29, 2024,05:55 PM IST

சென்னை:   யூடியூப் சானலை கண்டுபிடித்தவர்கள், ஏன்தான் இதைக் கண்டுபிடித்தோம் என்று வெறுத்துப் போகும் அளவுக்கு இன்று அதை தவறான பாதையில் பலர் கொண்டு போய்க் கொண்டுள்ளனர். எந்த நோக்கத்திற்காக இது கொண்டு வரப்பட்டதோ, இன்று அந்த நோக்கத்தை விட்டு இது வெகுவாக விலகிப் போய் விட்டது.


2005ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஸ்டீவ் சான், சாட் ஹர்லி, ஜாவேத் கரீம் ஆகியோர் இணைந்து இந்த யூடியூப் நிறுவனத்தை தொடங்கினர். பேபால் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்கள் இவர்கள். இன்று உலக அளவில் கூகுளுக்கு அடுத்து 2வது மிகப் பெரிய இணையதளமாக யூடியூப் உள்ளது. ஆனால் யூடியூபை நம்மில் எத்தனை பேர் சரியான முறையில் பயன்படுத்துகிறோம்.. கிடைக்கும் பதில் பெரும் ஏமாற்றத்தையே தருவதாக உள்ளது.




உருப்படியான தகவல்களை பரிமாறும் வீடியோ தளமாக இன்று யூடியூப் இருந்தாலும் கூட, பலர் இதை தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக சில யூடியூப் சானல்களைப் பார்க்கும்போது அறுவெறுப்பும், அதிர்ச்சியும்தான் மிஞ்சுகிறது. அப்படிப்பட்ட ஒரு சானலாகத்தான்  தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள வீரா டாக்ஸ் டபுள் எக்ஸ் யூடியூப் சானல் உள்ளது.  கிட்டத்தட்ட 5.34 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இந்த சானலில் உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை வைத்துள்ளனர். 


இந்த வீடியோக்களில் 99.99 சதவீத வீடியோக்கள் என்று கூட சொல்ல முடியாது, 100 சதவீத வீடியோவும் ஆபாசக் களஞ்சியமாகத்தான் உள்ளது.  சரி ஏதாவது ஒரு வீடியோவாவது நல்லா இருக்குமோ என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடிப் பார்த்தும் கூட ஒன்று கூட சிக்கவில்லை. ஒரு வீடியோவைக் கூட குடும்பத்தோடு பார்க்க முடியாது, குழந்தைகளுடன் பார்க்க முடியாது.. முகம் சுளிக்காமல், வெட்கப்படாமல் ஒரு வீடியோவைக் கூட பார்க்க முடியாது.




என்ன கொடுமை என்றால் இளம் பெண்களை ஆங்கராக வைத்துக் கொண்டு அவர்களை விட்டே ஆபாசமாக கேள்விகளைக் கேட்க வைத்து ஒவ்வொரு வீடியோவையும் தயாரித்துள்ளனர் என்பதுதான் கொடுமையிலும் பெரிய கொடுமையாக உள்ளது. இந்த ஆங்கர் பெண்களும் கேள்வி கேட்பதில் யாருக்கும் சளைத்தவர்களாக  இல்லை. இவர்களே இப்படிக் கேட்பார்களா அல்லது இப்படிக் கேளுங்கள் என்று இவர்களுக்கு உத்தரவிடப்படுகிறதா என்றும் தெரியவில்லை.


இப்படி ஏடாகூடமாக கேட்டுத்தான் இப்போது பெண் ஆங்கர் ஸ்வேதா சிக்கலில் மாட்டிக் கைதாகியுள்ளார். சமீப காலமாக இவரது கேள்விகள் எல்லாமே  ஆபாசத்தின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தன. அப்போதே பலரும் கமெண்ட்டில் கூறி வந்தனர் "ரொம்ப ஓவரா பேசறீங்க.. பார்த்து பேசுங்க" என்றெல்லாம் பலரும் எச்சரித்து வந்தனர். ஆனால் ஸ்வேதா கேட்கவில்லை (அல்லது அந்த யூடியூப் சானலின் ஓனர் அதைப் பொருட்படுத்தவில்லை).


இன்று ஒரு பெண்ணுக்கு மன உளைச்சல் கொடுத்து, அவரை தற்கொலை செய்வதற்கு தூண்டி விட்டு கைதாகியுள்ளார் ஸ்வேதா. இந்த ஸ்வேதாவின் வீடியோக்களில் எந்தக் கேளவியும் அறிவுப்பூர்வமாக இருப்பதில்லை. இடுப்பு தெரியறது தப்பா, குனிஞ்சு கீழ பாப்பியா, ரூம் போடணுமா.. இதுக்கு மேல எழுதுவதற்கு கம்ப்யூட்டருக்கே வெட்கம் வருகிறது, தயக்கம் வருகிறது.. இப்படித்தான் அந்த வீடியோக்களில் டைட்டில் வைக்கிறார்கள், பேசவும் செய்கிறார்கள். அதிலும் கேள்வி கேட்டு விட்டு அந்தப் பெண் பலமாக சிரிக்கும் பாருங்க.. அய்யோ கொடுமை.




எத்தனையோ யூடியூப் சானல்கள் உள்ளன, பெண்கள் பலரும் இதை அருமையாக பயன்படுத்துகிறார்கள்.. அருமையான விஷயங்களைச் சொல்கிறார்கள்.. அழகாக செய்கிறார்கள்.. ஒரு சில வீடியோக்கள் குப்பையாக இருந்தாலும் பெரும்பாலான வீடியோக்கள் நன்றாகவும் பொதுழு போக்காகவும், இன்பர்மேட்டிக்காகவும் உள்ளன. ஆனால் இந்த வீரா டாக்ஸ் டபுள் எக்ஸ் வீடியோக்களில் பெரும்பாலானவை ஆபாசக் களஞ்சியமாகத்தான் உள்ளன. இப்படியும் பிழைக்க வேண்டுமா என்ற கேள்விதான் அந்த வீடியோக்களைப் பார்க்கும் போது நமக்கு எழுகிறது.


நாலு பேரை வாழ வைக்கக் கூட வேண்டாம், நாலு பேரை திருத்தக் கூட வேண்டும், நாலு பேரை ஊக்குவிக்கக் கூட வேண்டாம்.. ஆனால் சமுதாயத்தைக் கெடுக்கும் கேடு கேட்ட வேலையைச் செய்யாமல் இருக்கலாமே. இதுபோன்ற இளம் பெண்களை ஆபாசமாக கேள்வி கேட்க வைத்து அவர்களது பெயரையும், மாண்பையும் கெடுக்காமல் இருக்கலாமே.. இனியாவது திருந்துங்கடா!