தஞ்சாவூரில் பயங்கரம்.. வகுப்பறையில் தமிழாசிரியை கத்தியால் குத்திக் கொலை.. இளைஞரின் வெறிச்செயல்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மதன் குமார் என்ற இளைஞர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகில் உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் தான் ரமணி (26). மல்லிப்பட்டினம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் ஆசிரியராக பணியில் ரமணி சேர்ந்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் மதன் (30). ரமணியை மதன் ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மதன் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் தான் ரமணியை காதலிப்பதாக கூறியுள்ளார் மதன். முதலில் இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் மகனுக்காக பெண் கேட்க முடிவு செய்தனர்.
ரமணி வீட்டுக்குச் சென்று பெண் கேட்டுள்ளனர். ஆனால் ரமணி திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி விட்டனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த மதன் இன்று காலை ரமணி வேலை பார்க்கும் பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டு இருக்கையில், வகுப்பறைக்குள் புகுந்து ரமணியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ரமணி உடனே மயங்கி கீழே விழுந்துள்ளார்.
சக ஆசிரியர்கள் ரமணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி இறந்துள்ளார். இந்த தகவல் கிடைத்த போலீசார் அப்பகுதிக்கு உடனே வந்து கொலையாளி மதனை கைது செய்தனர். போலீசார் மதனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து
இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு தனது கண்டத்தை தெரிவித்துள்ளார். அதில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணியின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக கவுன்சிலிங் தரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்