ஏங்கிய அமிதாப் பச்சன்.. ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி.. கூடவே ஒரு ரிமைன்டர்!

Su.tha Arivalagan
Oct 15, 2023,06:10 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கைலாச பர்வதத்துக்குப் போய் தியானம் செய்து வந்த புகைப்படத்துக்கு நடிகர் அமிதாப் பச்சன் ஒரு கருத்து தெரிவிக்க, பிரதமர் நரேந்திர மோடி அதற்கு ஜாலியான பதில் கொடுத்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், உத்தரகாண்ட மாநிலம் பிதோரகார் மாவட்டத்தில் உள்ளக கெளரி குந்த் என்ற இந்துக்களின் புனித இடத்திற்குச் சென்றிருந்தார். அங்கு வழிபாடுகளை நடத்திய அவர் அங்கிருந்தபடி ஆதி கைலாச மலையின் எழிலார்ந்த காட்சியைக் கண்டு மகிழ்ந்தார். மேலும், அங்கு அமர்ந்து தியானமும் செய்தார்.


இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பலரும் அதற்கு கருத்து தெரிவித்திருந்தனர். அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இந்தப் புகைப்படத்துக்கு கருத்து தெரிவித்திருந்தார்.




இதுதொடர்பாக அமிதாப் பச்சன் போட்டிருந்த டிவீட்டில், இறைமை, அற்புதம்.. கைலாச பர்வதத்தின் புனிதம்.. நீண்ட நாட்களாகவே இது என்னை மயங்கச் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு முறை கூட இங்கு நான் போக முடியவில்லை என்பதுதான் பெரும் சோகமே என்று ஏக்கத்துடன் கூறியிருந்தார்.


அமிதாப் பச்சனின் இந்தக் கருத்தைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி அதற்குப் பதில் கொடுத்துள்ளார். பார்வதி குந்த், ஜாகேஸ்வர் கோவில்களுக்கு நான் போயிருந்தது மிகவும் அருமையான அனுபவத்தைக் கொடுத்தது. வரும் வாரங்களில் ரான் உத்சவ் ஆரம்பிக்கிறது. நீங்கள் கட்ச் போய் விட்டு வர வேண்டும் என்று உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.. பிறகு, சர்தார் வல்லபாய் படேல் ஒற்றுமை சிலையையும் நீங்கள் இன்னும் பார்க்காமல் உள்ளீர்கள் என்று கூறியிருந்தார் பிரதமர் மோடி.


சர்தார் வல்லபாய் படேல் சிலை குஜராத்தில் உள்ளது. உலகின் மிகப் பெரிய சிலையாக இது வர்ணிக்கப்படுகிறது.  அதையும் அமிதாப் பச்சன் இன்னும் பார்க்கவில்லை என்பதை தனது பாணியில் பிரதமர் மோடி நினைவூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.