ஜேம்ஸ் ஆண்டர்சன் இவருக்கு "சித்தப்பா" மாதிரி.. 18 வயதில் கலக்கும் ரேஹான் அகமது!

admin
Dec 30, 2022,11:21 AM IST
கராச்சி:  பேஸ்புக்கை விட வயதில் இளையவர்.. இவருடைய தந்தைக்கு இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை விட 2 வயதுதான் அதிகம்.. இங்கிலாந்து அணியின் புதிய கிரிக்கெட் புயலாக மாறி கலக்க ஆரம்பித்திருக்கிறார் ரேஹான் அகமது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய சுழற் பந்து வீச்சு புயலாக மாறியுள்ள ரேஹான்தான் இப்போது அந்த நாட்டு ரசிகர்களின் சந்தோஷமாக மாறியிருக்கிறார்.  லெக் ஸ்பின்னரான ரேஹான் அனைவரது பார்வையையும் தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார்.

10 வயதிலேயே கூக்ளி, பிளிப்பர்,ஸ்லைடர் என கலக்கியவர் ரேஹான். 11 வயதாக இருக்கும்போது அலிஸ்டர் குக், பென் ஸ்டோக்ஸுக்கு எதிராக பந்து வீசி அவர்களை அவுட்டாக்கி அதிர வைத்தவர். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நெட் பிராக்டிஸின்போதுதான் இந்த அதிரடியைக் காட்டினார். அதற்கு அடுத்த வருடம் மறைந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷான் வார்னேவிடமிருந்து பாராட்டைப் பெற்றார்.


இப்போது 18 வயதாகி விட்ட ரேஹான், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சக்தியாக மாறி வருகிறார்.  கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த 3வது டெஸ்ட் போட்டியின்போது இவர்தான் ஸ்டாராக விளங்கிநார். பாகிஸ்தான் அணியைத் தோற்கடிக்க காரணமாக இருந்தார் ரேஹான் அகமது. ஆரம்பத்தில் பதட்டமாக காணப்பட ரேஹான், முதல் 5 ஓவர்களில் 37 ரன்களை விட்டுக் கொடுத்து விட்டார். 

ஆனால் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வேற மாதிரியான பவுலராக மாறி விட்டார். அவர் போட்ட கூக்ளியில் சிக்கி அவரது முதல் டெஸ்ட் விக்கெட்டாக சாத் ஷகீல் வீழ்ந்தார்.  இவரது பந்து வீச்சில்தான் பாபர் ஆசம் ரன் அவுட் ஆனார். கடைசியில் 5 விக்கெட்களைச் சாய்த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் ரேஹான் அகமது.  பாகிஸ்தானுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் வாஷவுட் செய்தது நினைவிருக்கலாம்.

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்களைச் சாய்த்து ரேஹான் தனது சாதனை அத்தியாயத்தை அதிரடியாக தொடங்கியுள்ளார். இவரது தந்தை நயீமும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். இவர் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று ஆடியவர். ஆனால் மகனோ, பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரேஹான் அகமதுவுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருப்பதாக பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்களும் கணித்துள்ளனர்.